இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்று இன்னும் ஒரு போட்டியை கூட சந்திக்காத நிலையில், இலங்கைத் தொடருக்கு அணித்தேர்வு பற்றியே பல விமர்சனங்கள் இருந்திருக்கிறது. இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் வீரர்கள் தேர்வு தாண்டி கேப்டன் தேர்வு பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ருதுராஜுக்கு இடம் தரப்படாமல், அதே வேளையில் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதோடு அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரிய அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருந்தார். தனிப்பட்ட முறையில் வீரராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரை வென்று கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதும், ஹர்திக் பாண்டியா அடுத்து இயல்பாக இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்புக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சூரியகுமாரை இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறும்பொழுது “குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா வெற்றிகரமான கேப்டனாக இருந்தார். முதல் ஆண்டில் கோப்பையையும் இரண்டாம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கும் அழைத்துச் சென்றார். மேலும்அவருக்கு சர்வதேச கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் நல்ல அனுபவம் இருக்கிறது.
மேலும் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அவர் துணை கேப்டனாக இருந்தார். இப்போது இந்திய அணிக்கு ஒரு புதிய பயிற்சியாளர் வந்திருக்கிறார். எனவே அவருக்கு ஒரு புதிய திட்டமிடல் இருக்கவே செய்யும். சூர்யாவும் சிறந்த வீரர். அவரும் பல ஆண்டுகள் விளையாடி தன்னை டி20 கிரிக்கெட்டில் தரவரிசையில் முதல் இடத்தில் வைத்திருக்கிறார். ஆனாலும் கூட புதிய பயிற்சியாளர் கம்பீர் உடன் சேர்ந்து மற்றவர்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக கொண்டு வந்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க : கேப்டனா சொல்றேன்.. நீங்க பிளேயர்ஸ் இப்படித்தான் இருக்கணும்.. இதத்தான் செய்யணும் – சூரியகுமார் பேட்டி
கம்பீர் கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் சிறந்தவர் மற்றும் பெரிய அனுபவம் கொண்டவர். அவர் விளையாட்டை மிக நன்றாக புரிந்து இருக்கக்கூடியவர். அதே சமயத்தில் கேப்டன் பொறுப்பு வழங்கப்படாத அளவுக்கு ஹர்திக் பாண்டியா எந்த தவறையுமே செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். அனுபவம் இல்லாத புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்று கோப்பையை வென்றது சாதாரண விஷயம் கிடையாது. அவர் கேப்டன் பதவிக்கு மிகவும் தகுதியானவர். எனவே கொஞ்சம் பொறுத்து இருந்து பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.






