நாளை டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அபிஷேக் ஷர்மாவை நீக்கிவிட்டு ரிங்கு சிங்கை கொண்டு வர வேண்டும் என முகமது கைஃப் கூறியிருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா பேட்டிங் மிகவும் சுமாராக இருந்து வருகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டுமே அவர் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். மற்றபடி அவர் பெரிய ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்.
கை கொடுக்கும் மாற்றம்
இந்த நிலையில் இரண்டு இடது கை வீரர்கள் தொடக்க இடத்தில் வர வேண்டாம் என சஞ்சு சாம்சன் அணியில் கொண்டுவரப்பட்டார். இது உடனடியாக பெரிய பலன் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. வாழ்வா சாவா இரண்டு போட்டியிலும் சஞ்சு சாம்சன் இரண்டு பெரிய அரை சதங்கள் அடித்திருக்கிறார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய தொடக்க ஆட்டக்காரர் கிங் நல்ல ஃபார்மில் இல்லாத காரணத்தினால் திடீரென நீக்கிவிட்டு ரோஸ்டன் சேஸை தொடக்க இடத்தில் கொண்டு வந்தது. அவரும் அந்தப் போட்டியில் நல்ல ரன் எடுத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக்கை நீக்கலாம்
இதுகுறித்து முகமது கைஃப் கூறும் பொழுது “தாராளமாக அபிஷேக் ஷர்மாவை நீக்கலாம். ஏனென்றால் இந்த வடிவத்தை பொறுத்தவரையில் திடீர் மாற்றங்கள் செய்யலாம். வெஸ்ட் இண்டீஸ் அப்படி செய்தது கூட நாம் பார்த்தோம். சரியாக விளையாடாத ஒரு பையன் உள்ளே இருக்கும் பொழுது நன்றாக விளையாடும் ஒரு பையன் வெளியே இருக்கிறார். நீங்கள் ரிங்கு சிங்கை உடனடியாக உள்ளே கொண்டு வரலாம்”
இதையும் படிங்க : பேர மாத்துங்க.. சோக்கர்ஸ் இனி நாங்க இல்ல நியூசிலாந்து தான்.. அவங்களால இந்தியாவை வெல்லவே முடியாது – தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்
“மேலும் சஞ்சு சாம்சன் ஏற்கனவே தன்னை நிரூபித்த ஒரு வீரர். அவர் கடந்த டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்தார். மேலும் இந்த வடிவத்தில் ஒட்டுமொத்தமாக 8000 ரன்கள் எடுத்திருக்கிறார். ஐபிஎல் தொடரை எடுத்தால் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் அவர் வருவார். எனவே அவரும் அபிஷேக் ஷர்மாவும் ஒன்று கிடையாது. இந்த காரணத்தால் அவரை நீக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.






