இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை அதிர்ஷ்டத்தால் வென்று விட்டது எனவும், தற்போதும் இந்திய அணி சிறந்த அணி கிடையாது என்றும் முகமது அமீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் இந்தியா அரையிறுதிக்கு கட்டாயம் தகுதி பெறாது என்று சொல்லி வந்தார். இந்த நிலையில் இந்திய அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில் அது அதிர்ஷ்டம் என்று கூறி விவாதங்களை தூண்டி இருக்கிறார்.
ஹெட்மயர் அவுட் இல்லை
தற்போது அவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் இந்திய அணி சிறப்பான அணி கிடையாது என பேசி வருகிறார். மேலும் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு வரவே வராது என சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் பேசும் போது “ஹெட்மயர் ஆட்டம் இழந்தது சர்ச்சைக்குரியதாக நான் உணர்கிறேன். அவர் அவுட் ஆகவில்லை என்று நான் நம்புகிறேன். அவர் இன்னும் சிறிது நேரம் விளையாடி ஸ்கோர் 220 வந்திருந்தால், நேற்று இந்தியா நாக் அவுட் ஆகியிருக்கும்”
சிறந்த அணி கிடையாது
“நீங்கள் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்திய அணி நல்ல கிரிக்கெட் விளையாடுவது கிடையாது. நீங்கள் அவர்களுடைய பீல்டிங்கை எடுத்துக் கொண்டால் நேற்று மட்டும் மூன்று முதல் நான்கு கேட்ச் வாய்ப்புகளை இழந்து இருந்தார்கள். பும்ராவைத் தவிர எல்லா பவுலர்களும் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். கிரிக்கெட்டை புரிந்து கொண்ட இந்திய ரசிகர்கள் என்னுடன் உடன்படுவார்கள்”
இதையும் படிங்க : நல்ல மனுஷங்களுக்கு நல்லதுதான் நடக்கும்.. சாம்சன் காத்திருப்புக்கு பலன் கிடைச்சிருச்சு – சூரியகுமார் யாதவ் பேட்டி
“ஹர்திக் பாண்டியா பெரிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடியது கிடையாது. வருண் சக்கரவர்த்தியும் அடி வாங்கினார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்ற அணிகளை போல சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடுவதில்லை. இந்தத் தொடரில் இந்தியா பேவரைட் கிடையாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.






