இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 லீக்கின் வெற்றி தற்போது உலகம் எங்கும் டி20 லீக்குகளை எடுத்துக்கொண்டு சென்று இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு கிரிக்கெட் வாரியங்கள் தனிப்பட்ட டி20 லீக்குகளை தங்கள் நாட்டில் நடத்துகிறார்கள்.
தற்பொழுது கிரிக்கெட் அமெரிக்காவை எட்டியதோடு தற்பொழுது அமெரிக்காவில் சொந்தமாக டி20 லீக் நடத்தப்படுகிறது. இந்த லீக் மேஜர் லீக் கிரிக்கெட் என்று அழைக்கப்படுகிறது.
இதில் மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த ஆறு அணிகளில் டெக்ஸாஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நியூயார்க் அணியை மும்பை இந்தியன்ஸ், சியாட்டல் ஆர்காஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய நான்கு ஐபிஎல் அணி உரிமை நிர்வாகங்கள் வாங்கி இருக்கின்றன. சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் இரண்டு அணிகளை மட்டும் அமெரிக்க நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன.
நேற்று இந்தத் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த அணிகளுக்கு பாப் டு பிளசிஸ் மற்றும் சுனில் நரைன் இருவரும் கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார்கள். டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் கேப்டன் பாப் இருவரும் வந்தார்கள். இதில் கேப்டன் பாப் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் இன்னொரு முனையில் விளையாடிய டெவோன் கான்வே 37 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 55 ரன்கள் குவித்தார்.
இதற்கு அடுத்து லகிரு மலிந்தா 17, மிலிந்த் குமார் 2, மிட்சல் சான்ட்னர் 21, பிராவோ 16, கல்வின் சாவேஜ் 5 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு நடுவில் நான்காவது வீரராக வந்த டேவிட் மில்லர் அதிரடியாக 42 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் லாக்கி பெர்குசன் நான்கு ஓவர்களுக்கு 23 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எந்த ஒரு பேட்ஸ்மேனும் சரியான பங்களிப்பை தரவே இல்லை. நட்சத்திர வீரர்களான மார்ட்டின் கப்தில் 0, ரூசோவ் 4, சுனில் நரை ன் 15 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இந்த அணி எடுத்ததுமே தங்கள் முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் களம் இறங்கிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் 34 பந்துகளுக்கு ஏழு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 55 ரன்கள் எடுத்து ஒன் மேன் ஷோ காட்டினார். ஆனாலும் இது லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவவில்லை.
20 ஓவர்கள் முடிவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 14 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது. இதை அடுத்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய முகமது மோசின் மூன்று ஓவர்களுக்கு எட்டு ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.