நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன. ஜூன் ஒன்றாம் தேதி துவங்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி குறித்து, பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்தியா இந்த டி20 உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் 5-ம் தேதி விளையாடுகிறது. இதற்கு அடுத்து ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு அமையும் பொழுதெல்லாம் விராட் கோலி வழக்கத்தை விட சிறப்பாக விளையாடுவதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறார். கடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா மெல்போன் மைதானத்தில் விராட் கோலி காட்டிய பேட்டிங் உலகத் தரத்தில் வேறொரு உயரத்தில் இருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் மிஸ்பா உல் ஹக் கூறும் பொழுது “வீரர்களின் உடலின் தசைக்கே ஒரு நினைவு இருக்கிறது. அவர்கள் யாரை எதிர்த்து சிறப்பாக விளையாடுகிறார்களோ அதை அவர்களது மனது பதிய வைக்கிறது. மீண்டும் அந்த அணிக்கு எதிராக விளையாடும் பொழுது அது வெளியில் வருகிறது. விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அந்த முனைப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடி சேதாரங்களை உண்டு செய்திருக்கிறார்.
விராட் கோலி பாகிஸ்தான் அணியின் மீது மனதளவில் மேலாதிக்கம் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானுடன் விளையாடும் பொழுது அவர் அதிக நம்பிக்கையுடன் இருப்பார். மேலும் உற்சாகமாகவும்.
இதையும் படிங்க : ஐபிஎல்- ல் 10 அணிகள் வந்ததும்.. எங்களுக்கு ரிஷப் பண்ட் மேலே சந்தேகம் இருந்தது உண்மை – சவுரவ் கங்குலி பேட்டி
விராட் கோலி அழுத்தத்தில் இருந்து ஊக்கத்தை எடுக்கக்கூடிய ஒரு சிறப்பு வாய்ந்த வீரர். அவர் உயர்தரமான வீரர். அவர் எந்தவித எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய வீரர். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விராட் கோலி சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணி வென்றது. எனவே பாகிஸ்தான் அணிக்கும் மற்ற அணிக்கும் ஒரே ஒரு வழி இருக்கிறது, அது விராட் கோலியை விரைவில் ஆட்டம் இலக்கச் செய்வது மட்டுமே” என்று கூறியிருக்கிறார்.