இந்திய கிரிக்கெட்டில் மூன்று ஃபார்மட்டுகளிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைவு. குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் எடுக்கும் திறனுடன் செயல்படும் ஒரு இந்திய ஸ்பின்னர் தற்போது கவனம் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் நெருங்கி வரும் நிலையில், அந்த வீரர் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் பாராட்டிப் பேசியுள்ளார்.
அவர் வேறு யாருமில்லை, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். மூன்று ஃபார்மட்டுகளிலும் விளையாடி வரும் குல்தீப், குறிப்பாக குறுகிய ஓவர் போட்டிகளில் தனது வித்தியாசமான சுழற்பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுத்து வருகிறார். இதுவரை மூன்று ஃபார்மட்டுகளிலும் சேர்த்து இந்திய அணிக்காக 194 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 369 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இது குறித்து மைக்கேல் கிளார்க் கூறும்போது, “மூன்று ஃபார்மட்டுகளிலும் விளையாடும் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைவு. தற்போதைய நிலையில் குல்தீப் யாதவ்தான் உலகின் சிறந்த ஆல் பார்மேட் வீரர் என்று நான் நினைக்கிறேன். குறுகிய ஓவர் போட்டிகளிலும் அவர் மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறார். ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.






