எஸ்ஏ டி20 லீக் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளும் மோதி விளையாடின.
இதில் எம்ஐ கேப்டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற எம்ஐ அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி இந்த அணிக்கு வாண்டர் டெசன் மற்றும் ரிக்கல்ட்டன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 4.6 ஓவரில் 51 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய ரிக்கல்ட்டன் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 33 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதற்குப் பின்னர் களமிறங்கிய ரிசா ஹென்றிக்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினாலும், கோனோர் எஸ்டெருளின் 26 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் ஜார்ஜ் லின்டே 20 ரன், குட்டி ஏபிடி என்று அழைக்கப்படும் டெவால்ட் ப்ரவீஸ் 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 38 ரன்கள் குவித்தார். இதனால் எம்ஐ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணிகளம் இறங்கியது.
இதில் தொடக்க ஆட்டக்காரர் பெடிங்காம் 5 ரன்னில் ரபடாவின் பந்துவீச்சில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் டோனி டி ஜார்ஜி 26 ரன் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களமிறங்கிய ஹெர்மன் 1 ரன்னில் வெளியேற, அபெல் 30 ரன்னில் நடையை கட்டினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் 6 ரன் மற்றும் ஸ்டெப்ஸ் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார்.
இதையும் படிங்க:330 ரன்.. முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் அசத்தல்.. பாபர் அசாம் ஏமாற்றம்.. 78 ரன்னில் நியூசி அணி வெற்றி.. முத்தரப்பு தொடர்
பின் வரிசை வீரர்கள் மிக விரைவாக வெளியேற, சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் குவித்தது. எம்ஐ அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ககிசோ ரபாடா 3.4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். மற்றும் போல்ட் 4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக எம்ஐ அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.