எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபயர் போட்டியில் எம்ஐ கேப் டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் ரசித்கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணி சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
எஸ்ஏ டி20 லீக்
செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிக்கல்டன் மற்றும் வாண்டர்டசன் ஆகியோர் சிறப்பாக விளையாடி எம்ஐ அணிக்கு அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவர்களில் 87 ரன்கள் குவித்தது. 32 பந்துகளை எதிர் கொண்ட வாண்டர்டசன் 40 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 27 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 44 ரன்கள் குவித்து வெளியேறினார். மேலும் மூன்றாவது வரிசை வீரரான டெவால்ட் ப்ரவீஸ் 30 பந்துகளில் நான்கு சிக்ஸர்களோடு 44 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் லிண்டே 14 பந்தில் 26 ரன், டிலானோ 17 ரன் விளாச எம்ஐ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது.
ரஷீத் கான் படைத்த சாதனை
ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரிட்டோரியஸ் 15 ரன்னில் ராபாடாவில் பந்து வீச்சில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் மிச்சல் ஓவன் போல்ட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களமிறங்கிய மூன்று வீரர்கள் குறைந்த ரன்னில் வெளியேற துணித் வெல்லால்கெ எம்ஐ கேப்டன் ரஷீத் கானின் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் டேவிட் மில்லர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி ஓரளவு போராடியது. டேவிட் மில்லர் 45 ரன்களில் லின்டேவின் பந்துவீச்சிலும் தினேஷ் கார்த்திக் 28 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ரஷித் கான் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதையும் படிங்க:திலக் வர்மா இல்லனா அபிஷேக் ஷர்மா.. இருவரில் சிறந்த வீரர் யார்.? இந்திய முன்னாள் கோச் வெளிப்படை பேச்சு
இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலமாக ரஷித் கான் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய முன்னாள் சிஎஸ்கே வீரர் பிராவோவின் சாதனையை முறியடித்தார். 582 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 631 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நிலையில் ரஷித் கான் 472 போட்டிகள் விளையாடி 633 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இறுதியில் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எம்ஐ அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.