தற்போது உத்திர பிரதேஷ் டி20 கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் கேப்டன் ரிங்கு சிங் ஒரே ஓவரில் மூன்று விக்கெட் கைப்பற்றி தன்னுடைய அணியை திரில் வெற்றி பெற வைத்து அசத்தியிருக்கிறார்.
ரிங்கு சிங் ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் மிக முக்கியமான 19வது ஓவரை வீசி ஆட்டத்தை திருப்பி இந்திய அணியை வெற்றி பெற வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதையே உத்தரபிரதேஷ் டி20 லீக்கிலும் செய்து எல்லோரையும் மீண்டும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
மழையால் தாமதிக்கப்பட்ட போட்டி
ரிங்கு சிங் கேப்டனாக இருக்கும் மீரட் மாவேரிக்ஸ் அணியும் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது. மழையால் போட்டி நடுவில் பாதிக்கப்பட்டதன் காரணமாக ஒன்பது ஓவராக குறைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மீரட் மாவேரிக்ஸ் அணி ஒன்பது ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மாதம் கௌஷிக் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.கேப்டன் ரிங் சிங் ஒரு பந்தை மட்டுமே சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பந்துவீச்சில் சுபம் மிஸ்ரா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
மேஜிக் செய்த ரிங்கு சிங்
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஒன்பது ஓவர்களில் 16 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த அணி ஐந்து ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது. மேற்கொண்டு ஏழு விக்கெட் கைவசம் இருக்க, ஓவருக்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இந்த நிலையில் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் ஆறாவது ஓவரை கேப்டன் ரிங்கு சிங் வீச வந்தார். மேலும் முதல் பந்திலேயே பௌண்டரியையும் கொடுத்தார். ஆனால் இதற்கு அடுத்த பந்தில் சிறப்பாக விளையாடி வந்த வீரரை ஆட்டம் இழக்க வைத்தார். தொடர்ந்து அந்த ஓவரில் கடைசி ஐந்து பந்துகளுக்கு மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் டீம் தோற்கட்டும்.. ஆனா அவங்க செஞ்ச இந்த விஷயத்துக்கு வெட்கப்படறேன் – வாசிம் அக்ரம் விமர்சனம்
கேப்டன் ரிங்கு சிங் ஒரு ஓவரில் ஏழு ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதின் காரணமாக, கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 7.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரிங்கு சிங்கின் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.