நடப்பு ஐ.பி.எல் தொடரில் 61வது ஆட்டமாக, கொல்கத்தா ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஹைதராபாத் ஜெயித்திருக்கிறது. ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்கு இதுவரையில் குஜராத் அணி மட்டுமே தனது இடத்தை உறுதி செய்திருக்கிறது. மீதமிருக்கும் மூன்று இடங்களுக்கு லக்னோ, ராஜஸ்தான், பெங்களூர், டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத் என ஆறு அணிகள் போட்டியிட்டு வந்த சூழலில், ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியுடனான தோல்வியால் இந்தப் போட்டியிலிருந்து வெளியேறி இருக்கிறது.
எப்படியும் லக்னோ, ராஜஸ்தான் அணிகள் ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்துவிடும், நான்காவது இடத்திற்குதான் பெங்களூர், டெல்லி, பஞ்சாப் அணிகள் போட்டியிடும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இதில் பெங்களூர் தன் கடைசி ஆட்டத்தில் நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்க வேண்டும். இல்லையென்றால் டெல்லியும் பஞ்சாப்பும் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் வெல்லும் அணி, அடுத்து தன் கடைசி ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலையே நிலவுகிறது.
ஏலத்தில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளாகக் கணிக்கப்பட்ட பஞ்சாப்பும், டெல்லியும் ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் கட்டாயம் நுழையுமென்று பலர் கணித்திருந்த சூழலில், தற்போது ஒரு அணிதான் நுழைய முடியும், அதுவும் இரண்டு ஆட்டங்கள் ஜெயித்தால் மட்டுமே என்று நிலைமை மாறி இருக்கிறது.
இதில் பஞ்சாப் அணி தன் ஆரம்ப ஆட்டங்களில் சிறப்பான வெற்றிகளையே பெற்றது. வெஸ்ட்-இன்டீசில் இங்கிலாந்து அணிக்காகப் போட்டிகளை முடித்துக்கொண்டு தாமதமாக பஞ்சாப் அணிக்குள் வந்த பேர்ஸ்டோவிற்காக, பனுக ராஜபக்சேவை வெளியில் அமர வைத்தது பஞ்சாப் அணியைப் பாதிப்படைய வைத்துவிட்டது.
துவக்க ஆட்டக்காரராக மிகச்சிறப்பாக விளையாடக்கூடிய பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் தனது துவக்க இடத்தை பேர்ஸ்டோவிற்காக தியாகம் செய்து, அவர் கீழே விளையாட ஆரம்பித்தார். இது பெங்களூர் அணியுடனான கடந்த ஆட்டத்தில் நல்ல பலனை தந்தது. பேர்ஸ்டோ 29 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி, பஞ்சாப் அணி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்கிறது.
பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் தன் பேட்டிங் இடத்தைத் தியாகம் செய்திருப்பதைப் பற்றி, முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ட்வீட்டரில் “ஒரு உண்மையான அணி வீரரை, தலைவரை பார்க்க விரும்புகிறிர்களா? அப்படியென்றால் மயங்க் அகர்வாலை பார்த்தால் போதும். அவர் வெற்றிக்கரமாக விளையாடிய துவக்க இடத்தை பேர்ஸ்டோவுக்கு தியாகம் செய்து, அவர் சிறப்பாக விளையாட வாய்ப்பு தந்திருக்கிறார். ஜானி நன்றாக விளையாடுங்கள். வெல்டன் மயங்க் அகர்வால்” என்று கருத்திட்டு இருக்கிறார்!