ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தற்போது இந்திய அணியின் பேட்டிங் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்பது பெரிய விவாதமாகி வரும் நிலையில், ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் அதிரடியான கருத்தை கூறியிருக்கிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இருக்கிறார்கள். மாற்று துவக்க ஆட்டக்காரருக்கான இடம் அணியில் கொடுக்கப்படவில்லை. அந்த இடத்தில் விராட் கோலி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக யார் இருக்க வேண்டும் என்பது பெரிய விவாதம் ஆகி வருகிறது. இடதுகை வலதுகை காம்பினேஷன் வேண்டும் என்கின்ற காரணத்தினால் ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும் என்று சிலரும், நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் விராட் கோலி துவக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என சிலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
அதே சமயத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் ஜெய்ஸ்வாலுக்கு சிறப்பாக அமையவில்லை. அதே சமயத்தில் 35 வயதான விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தோப்பியை கைப்பற்றினார். மேலும் அவரே ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரிலும் கடந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரராக இருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து மேத்யூ ஹைடன் பேசும்பொழுது “உங்களுக்கு துவக்க இடத்தில் இடதுகை வலதுகை காம்பினேஷன் வேண்டும். உங்களால் பேட்டிங் வரிசையில் தொடர்ச்சியாக ஐந்து வலதுகை வீரர்களை வைத்திருக்க முடியாது. நீங்கள் அப்படி செய்தால் ஆஸ்திரேலியா அணி உங்களுக்கு எதிராக ஜாம்பாவை களம் இறக்கி ஹலோ சொல்லும். விராட் கோலி துவக்க வீரராக வரவேண்டும் இல்லை என்றால் என்னுடைய அணியில் அவருக்கு இடமில்லை. அவர் தற்போது சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்.
இதையும் படிங்க : யோசிக்காம அவர உட்கார வச்சிடுங்க.. டிவில இந்திய அணி சம்பந்தமா இதை மட்டும் பேசாதிங்க – கவாஸ்கர் பேச்சு
ரோகித் சர்மா ஒரு பல்துறை வீரர். அவர் மிடில் ஆர்டருக்கு சென்று பேட்டிங் செய்ய வெட்கப்பட போவது கிடையாது. மேலும் அவர் டி20 கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்திருக்கிறார். அத்தோடு மிடில் ஆர்டரில் விளையாடி அவர் பேட்டிங் யூனிட்டை அங்கிருந்து வழிநடத்த முடியும்” என்று கூறி இருக்கிறார்.