14 ரன்களுக்கு 5 விக்கெட் அள்ளிய மார்க் வுட் ; லக்னோவிடம் சரணடைந்த டெல்லி!

0
103
Mark Wood

ஐபிஎல் 16ஆவது சீசனில் மூன்றாவது போட்டி இன்று உத்தரப்பிரதேசம் லக்னோ மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்து முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ அணிக்காக கேப்டன் கே எல் ராகுல் மற்றும் கையில் மேயர்ஸ் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

- Advertisement -

ஆரம்பம் முதலில் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடிய கே.எல்.ராகுல் சர்க்காரியா பந்துவீச்சில் வெளியேறினார். இதற்கு அடுத்து கையில் மேயர்ஸ் தந்த எளிமையான கேட்ச்சை டெல்லி வீரர் கலீல் அகமது தவறவிட்டார்.

இதற்குப் பின்பு கையில் மேயர்ஸ் அதிரடி டெல்லி பந்துவீச்சாளர்களை வதம் செய்வதாக அமைந்தது. 38 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் இரண்டு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 73 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். தீபக் ஹூடா 17 ரன்கள், குருனால் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 15 ரன்கள், மார்க்கஸ் ஸ்டாய்னீஸ் 12 ரன்கள், நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 21 பந்தில் 36 ரன்கள், இளம் வீரர் ஆயுஸ் பதோணி ஏழு பந்தில் 18 ரன்கள், கிருஷ்ணாப்பா கௌதம் ஒரு பந்தில் ஆறு ரன்கள் என எடுக்க மொத்தம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை லக்னோ அணி குவித்தது. டெல்லி அணித்தரப்பில் கலீல் அகமது நான்கு ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் விட்டு தந்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணிக்கு முதல் நான்கு ஓவர்களில் 40 ரன்கள் கிடைத்தது. இதற்குப் பிறகு ஐந்தாவது ஓவருக்கு வந்த இங்கிலாந்தின் அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் அடுத்தடுத்து பிரிதிவி ஷா மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரையும் கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். மீண்டும் ஏழாவது ஓவரை வீச வந்தவர் சர்ப்ராஸ் கானையும் வெளியேற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து டேவிட் வார்னர் மற்றும் ரைலி ரூசோவ் இருவரும் கொஞ்சம் அதிரடி காட்டினார்கள். பிறகு ரூசோவ் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். மிகவும் மெதுவாக விளையாடிய டேவிட் வார்னர் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரோமன் பவல் ஒரு ரன்னிலும், இம்பேக்ட் பிளேயராக வந்த அமான் கான் நான்கு ரன்னிலும் ஆட்டம் இழந்தார்கள்.

மீண்டும் பந்து வீச வந்த மார்க் வுட் பதினாறு ரன்னில் அக்சர் பட்டேலையும், நான்கு ரன்னில் சர்க்காரியாவையும் வீழ்த்தி, நான்கு ஓவர்களுக்கு 14 ரன்கள் மட்டுமே கொடுத்து,ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 20 ஓவர்களில் முடிவில் டெல்லி அணி ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் ஆட்டத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது!