நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். இந்த நிலையில் விராட் கோலிக்கு பந்து வீசுவது குறித்து தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் மார்க்கோ யான்சென் பேசி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் மார்க்கோ யான்சென் பேட்டிங்கில் அதிரடியாக 39 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு தோல்வி பயத்தை உண்டாக்கினார். அவரது விக்கெட்டை கைப்பற்றிய பிறகு இந்திய அணியின் வெற்றி படிப்படியாக உறுதியானது. மேலும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு இவரது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் முக்கிய காரணமாக இருந்தது.
வின்டேஜ் விராட் கோலி
நேற்றைய போட்டியில் விராட் கோலி விளையாட விதத்தில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. அவர் எந்த இடத்திலும் பதுங்கி விளையாடவில்லை. வந்ததும் பவுண்டரி உடன் ஆரம்பித்த அவர், பவர் பிளவில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆச்சரியப்படுத்தினார். மேலும் நேற்றைய போட்டியில் மட்டும் மொத்தம் ஏழு சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
இந்த இன்னிங்ஸை பார்த்த பொழுது இளம் வயதில் விராட் கோலி பயம் இல்லாமல் விளையாடுவதை பார்ப்பது போலவே இருந்தது. மேலும் சதம் அடித்த பிறகு அடுத்த 35 ரன்களை அவர் மிக வேகமாக எட்டினார். இதன் காரணமாகவே இந்திய அணி 350 ரன்கள் எடுக்கும் நிலைக்கு சென்றது. இந்த ஸ்கோரிங் காரணமாகவே இந்திய அணியால் போட்டியில் வெற்றி பெறவும் முடிந்தது.
அது எரிச்சலான விஷயம்
விராட் கோலி குறித்து பேசி உள்ள மார்க்கோ யான்சென் “அவர் விளையாடுவதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் விளையாடுவதை டிவியில் பார்த்து வளர்ந்து, இப்பொழுது அவருக்கே பந்து வீசுவது கொஞ்சம் எரிச்சலான விஷயமாக இருக்கிறது. அதேநேரத்தில் இது வேடிக்கையாகவும் இருக்கிறது. அவர் டிரைவ், ஃபுல் ஷாட், கட் ஷாட் எல்லாவற்றையும் மிகச் சிறப்பாகவே விளையாடுகிறார். அவரிடம் எதுவும் பெரிதாக மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்கிறார்”
இதையும் படிங்க : டி20 போட்டியில் அபிமன்யூ ஈஸ்வரன் சதம் விளாசல்.. இனி டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என அஸ்வின் கிண்டல்
“உலகத்தர வீரர்களுக்கு பந்து வீசும் பொழுது, அவர்களை வெளியேற்றுவது மிகவும் கடினமான விஷயம். எனவே நான் அவர்களுக்கு பந்து வீசும் போது முதல் 10 அல்லது 15 பந்துகளுக்குள் அவர்களது விக்கெட்டை எடுத்து விட வேண்டும் என்று நினைப்பேன். அப்படி செய்யவில்லை என்றால், அவர்கள் செட்டில் ஆகி விடுவார்கள். பிறகு அவர்களது விக்கெட்டை கைப்பற்ற முடியாது. இங்கு எல்லோருக்கும் எப்படி விளையாடுவது என்று தெரியும். எனவேதான் பி அல்லது சி திட்டத்திற்கு நாம் போக வேண்டியதாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






