இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் எடுக்கும் முடிவுகளில் தன்னால் பொது அறிவை பார்க்க முடியவில்லை என இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததில் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் பங்கு பெரிய அளவில் இருப்பதாக வெளியில் விமர்சனம் சென்று கொண்டிருக்கிறது. இதில் தற்பொழுது மனோஜ் திவாரியும் இணைந்திருக்கிறார்.
தோல்வியில் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் பங்கு
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்தது மிகப்பெரிய தவறாக அந்த போட்டியில் அமைந்தது. இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான 90 சதவீத தவறு அங்குதான் நிகழ்ந்தது.
மேலும் முதலில் பந்து வீசக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டதால்தான் அணியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இடம் பெறவில்லை, எனவே இங்கிருந்து எல்லாத் தவறுகளும் ஆரம்பித்தது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பத்தின் போது பும்ராவுடன் அஸ்வின் இணைந்து பந்து வீசாததும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இவர்களின் முடிவுகளில் பொது அறிவை பார்க்க முடியவில்லை
இதுகுறித்து மனோஜ் திவாரி கூறும்பொழுது “சில நேரங்களில் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மாவின் முடிவுகள் எனக்கு புரியவில்லை. அவைகளில் என்னால் பொது அறிவை பார்க்க முடியவில்லை. இவர்கள் இருவரும் நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள் என்பது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர் வரும்பொழுது இப்படி ஏதாவது புதியதாக செய்ய முயற்சி செய்கிறார்கள்”
“மூன்று சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவர் குறைந்த ஓவர்கள் பந்து வீசுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகத்தான் இருப்பார் என்பது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர். 107 ரன்களை பாதுகாக்கும் பொழுது, பும்ராவுடன் சேர்த்து அவரை ஏன் கொண்டு வரவில்லை?”
இதையும் படிங்க : நாளை புனே டெஸ்ட்.. மழைக்கான வாய்ப்பு.. ஆடுகளம் மற்றும் மைதான வரலாற்று புள்ளி விவரங்கள் – முழு தகவல்கள்
“நல்ல கேப்டன்களும் தவறு செய்யவே செய்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் மனதில் நிறைய விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கும். எனவே இங்கு தொடர்ந்து நல்ல வழிகாட்டுதலை கொடுப்பதில் பயிற்சியாளரின் பங்கு பெரிய அளவில் இருக்கிறது. ஆனால் கம்பீரிடமிருந்து அப்படி எதுவும் நடக்கவில்லை. அது ஏன் என எனக்கு புரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.