இந்திய அணிகள் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நயவஞ்சகர் என மிகவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது இந்திய அணி ஆசியக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருப்பதும், இந்தத் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படாமல் இருப்பதும் கம்பீரை நயவஞ்சகர் என்று உணர வைப்பதாக மனோஜ் திவாரி குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும்பொழுது “நான் எப்போதும் கம்பீரை ஒரு நயவஞ்சகராகவே உணர்கிறேன். ஏனென்றால் இந்திய அணியின் பயிற்சியாளராக இல்லாத போது இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக் கூடாது என்று சொன்னது அவரே. இப்போது அவர் என்ன செய்யப் போகிறார்? தற்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை தொடரில் மோதிக்கொள்ள இருக்கின்றன”
“தற்போது ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்படி இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதால் தான் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என ஏன் அவரால் இப்போது சொல்ல முடியாது?”
“ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரர், அவரை இந்திய டி20 அணியில் இருந்து வெளியில் வைக்க முடியாது என்று சொன்னது அவர்தான். உண்மையில் அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஆனால் தற்போது அவர் இந்திய டி20 அணியில் இல்லை”
இதையும் படிங்க : பும்ரா இல்ல.. இந்த 4 பவுலர்களை ஆடறது பெரிய சவாலா இருந்தது.. ஸ்பின்னர்ஸ் சும்மா – புஜாரா கருத்து
“இப்படி சொல்லி செய்யாமல் விட்ட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு விஷயங்கள் ஒரு உதாரணம்தான். அவர் எப்போதும் சொன்னதற்கு நேர் மாறாகவே செய்திருக்கிறார். எனவே நான் அவரை நயவஞ்சகராகவே உணர்கிறேன். எப்போதும் நயவஞ்சகராகவே இருந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.