ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று இந்திய அணி சாம்பியன் ஆனது. 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணி அதற்கு அடுத்து 17 வருடங்கள் டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. தற்போது டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கும் இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி முதல்முறையாக ஐசிசி 2007 ஆம் ஆண்டு நடத்திய டி20 உலகக்கோப்பை தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றியது. அதற்கு அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மீண்டும் மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றியது.
இதற்குப் பிறகு இந்திய அணி எந்த வடிவத்திலும் உலககோப்பை தொடரை கைப்பற்றவில்லை. இந்த நிலையில் இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை இறுதி போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, டி20 உலகக்கோப்பை தொடரை 17 வருடங்கள் கழித்தும், ஒரு ஐசிசி உலகக்கோப்பை தொடரை 13 வருடங்கள் கழித்தும் கைப்பற்றி இருக்கிறது.
ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்றிய இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தனிப்பட்ட யார் ஒருவரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு மொத்த அணியும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் வந்து மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.இந்த போட்டி எதிர்பார்க்காத அளவுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாழ்த்து தெரிவிக்கும் பொழுது “உலகக்கோப்பை சாம்பியன்கள் 2024. என் இதயத்துடிப்பு அதிகரித்தது. அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் நீங்கள் நன்றாகச் செய்து முடித்தது சிறப்பு. நீங்கள் உலகக் கோப்பை தொடரை வென்றதற்கு இந்தியா மற்றும் உலகெங்கும் இருக்கும் இந்தியர்களிடமிருந்து பெரிய நன்றி.உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 16ஆவது ஓவர்ல பந்தை பார்த்தேன்.. அப்பயே அந்த விஷயம் தெரிஞ்சிருச்சு.. அங்கதான் மாறுச்சு – தொடர் நாயகன் பும்ரா பேட்டி
மகேந்திர சிங் தோனி குறிப்பிட்டுள்ளது போல இந்தியா எங்கும் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கிறது. பெரிய நகரங்களில் மக்கள் ஒன்று கூடி திருவிழா போல கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள். இந்திய அணிக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு காத்திருக்கிறது!