வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிக்ஸர் அடிக்க முடியாமல் திணறியது குறித்து இந்திய முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பெங்களூரில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டு தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 9 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 7.4 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்து ஆட்டம் தடைபட்டது.
இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் பவர் ஹிட்டிங் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் இந்திய பேட்டர்கள் இன்னும் தங்களது ஷாட்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அபினவ் முகுந்த் பேசும்போது “வெஸ்ட் இண்டீஸ் அணியின் பௌலிங் பிளான் சில இடங்களில் மிகவும் சிறப்பாக இருந்தது. அது ஒன்றும் மிகப்பெரிய பலம் வாய்ந்த பௌலிங் லைன் அப் கிடையாது, ஆனால் இந்திய அணி இதுகுறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வீரராக இருக்கும் அழுத்தத்தில் ஃப்ரீடம் இருந்தாலும், குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்டர்கள் தங்களது பவர் கேம் திறனை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மாவின் பேட்டிங் குறித்து அபினவ் முகுந்த் பேசும்போது “ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா இருவரும் ஸ்பின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக ஆடக்கூடிய பிளேயர்கள். ஆனால் இந்த போட்டியில் நாம் பார்த்த அந்த ஏழு ஓவர்களில் ஸ்ரேயாஸ் மற்றும் திலக் இருவராலும் ஸ்பின் பந்துவீச்சிற்கு எதிராக ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை. ஒரு ஓவருக்கு ஒரு சிக்ஸர் வீதம் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் இது எனக்கு ஒரு சிறிய கவலையை ஏற்படுத்தியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் தொடர்ச்சியாக அனைத்து பௌலர்களையும் சிக்ஸர் அடித்துக்கொண்டே இருந்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.