தற்போது நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரில் இன்று ஷாருக் கான் தலைமையிலானலைக்கா கோவை கிங்ஸ் அணியும் விஜய் சங்கர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் ஒருவன் வித்தியாசத்தில் லைக்கா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் சுஜய் 24 பந்தில் 27 ரன்கள், மூன்றாவது இடத்தில் வந்த பி.சச்சின் 24 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு செய்யவில்லை.
அதே சமயத்தில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய அணியின் கேப்டன் ஷாருக் கான் 32 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 55 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லைக்கா கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் தரப்பில் இந்திய அணிக்கு விளையாடிய நடராஜன் மற்றும் அஜித் ராம் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரகேஜா 57 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 18 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கு 12 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தது.
இந்த நிலையில் 19ஆவது ஓவரை வீசிய கேப்டன் ஷாருக் கான் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதற்கு அடுத்து கடைசி ஓவரை வீசிய முகமத் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் எட்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததோடு, மூன்று விக்கெட்டுகளும் அந்த ஓவரில் விழுந்தது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இறுதியில் லைக்கா கோவை கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: வெறும் 11 மாதத்தில்.. தோனிக்கு டஃப் கொடுக்கும் ரிங்கு சிங்.. மிரள வைக்கும் புள்ளி விபரம்.. ரசிகர்கள் ஆச்சரியம்
இந்த போட்டியில் பேட்டிங்கில் அரைசதம் அடித்திருந்த லைக்கா கோவை கிங் அணியின் கேப்டன் ஷாருக் கான் பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரே ஆட்டநாயகனாகவும் இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.






