நேற்று நடைபெற்ற முடிந்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி பரபரப்பாக விளையாடி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த லக்னோ அணியின் இளம் வீரர் முகேஷ் சௌத்ரி தான் விளையாடிய விதம் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் ரகுவன்சி 45 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியில் முன்னணி வீரர்கள் அனைவரும் விரைவாக ஆட்டம் இழந்தனர்.
அதற்குப் பிறகு களத்தில் இருந்த ஆயுஸ் பதோணி 54 ரன்னில் வெளியேற, லக்னோ அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனார். ஆனால் எதிர்பாராத விதமாக இளம் வீரர் முகேஷ் சௌத்ரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 27 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட நிலையில் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 54 ரன்கள் குவித்து லக்னோ அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
கடந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற இவர் ஐந்து பந்துகளை மட்டுமே விளையாடினார். ஆனால் அதற்குப் பிறகு இந்த போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய முகேஷ் சவுத்ரி தன் கேப்டன் ரிஷப் பண்டிடம் பேசிய கருத்துக்கள் குறித்த சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “கடந்த போட்டியில் என்னால் நான்கு முதல் ஐந்து பந்துகளை மட்டுமே விளையாட முடிந்தது. நான் ஆட்டம் இழக்கவில்லை என்றாலும், அந்த பந்துகளை என்னால் சரியாக அடித்து ஆட முடியவில்லை. அப்போது நான் என் கேப்டனிடம் பேசினேன். அப்போது அவர் எனக்கு நீ அதிகமாக எதையும் யோசிக்க வேண்டாம். நீ உன்னுடைய செயல்முறையின் மீது மட்டுமே கவனம் செலுத்து என்று கூறினார். நீ அதிகமாக யோசித்தால் அதுவே உனக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே பந்தை பார்த்து அடித்து விளையாடு, நாங்கள் உன் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று கூறினார் என்று பேசியிருக்கிறார்.






