ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரின் நான்காவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் விளையாடின. இதில் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்த விதம் குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
லக்னோ அணி தோல்வி
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய பேட்டிங் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிச்சல் மார்ஸ் 36 பந்தில் 72 ரன், நிக்கோலஸ் பூரன் 30 பந்து 75 ரன்கள் குவித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அதற்குப் பின்னர் வெற்றியிலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. லக்னோ அணியின் சிறப்பான சுழற் பந்துவீச்சால் ஆரம்பத்திலிருந்து நெருக்கடிக்கு உள்ளான டெல்லி அணிக்கு துணை கேப்டன் பாப் டூ ப்ளஸ்சிஸ் 29 ரன், ஸ்டப்ஸ் 34 ரன், விப்ராஜ் நிகாம் 39 ரன் எடுக்க இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அசுட்டோஸ் சர்மா 31 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 66 ரன்கள் குவித்து டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால் ஒரு விக்கெட்டில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது.
தோல்விக்கான காரணம் குறித்து பண்ட்
இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் பண்ட் பேசும் போது ” எங்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் நன்றாக விளையாடினார்கள் என்று நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் இது ஒரு நல்ல ஸ்கோர் ஆகும். ஒவ்வொரு போட்டியில் இருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் எவ்வளவு அடிப்படைகளை சரியாக செய்கிறோமோ அவ்வளவு எதிர்காலத்திற்கு சிறப்பானதாக அமையும். நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எடுத்தோம், ஆனால் பேட்டிங் செய்வதற்கு இது ஒரு அருமையான ஆடுகளம் என்று தெரியும்.
இதையும் படிங்க:211 ரன்.. தோல்வியில் தத்தளித்த டெல்லி அணி.. ஒற்றை ஆளாய் காப்பாற்றிய அசிடோஸ் சர்மா.. 1 விக்கெட்டில் லக்னோ தோல்வி
டெல்லி அணிக்கு இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது என்று நினைக்கிறேன். ஒன்று ஸ்டெப்ஸ் மற்றொன்று அசிட்டோசர்மா. இதில் விப்ராஜ் நிகாம் ஆட்டத்திலிருந்து சிறப்பாக செயல்பட்டு வெற்றியை எங்களிடத்தில் இருந்து பறித்து விட்டார் என்று நினைக்கிறேன். பந்துவீச்சாளர்களுக்கு போதுமான வாய்ப்பு இருந்தது. ஆனால் நாங்கள் அடிப்படை விஷயங்களை சரியாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. நாங்கள் இந்த போட்டியின் மூலமாக நேர்மறை விஷயங்களை எடுத்துக் கொள்கிறோம். ஆட்டத்தின் கடைசி பந்தில் மோகித் சர்மாவின் பேடுகளை பந்து தாக்காமல் இருந்தால் அது ஸ்டம்பிங் செய்ய ஒரு நல்ல வாய்ப்பாகும். ஆனால் கிரிக்கெட்டில் இது போன்று நடப்பது இயல்புதான். இது போன்ற விஷயத்தில் கவனம் செலுத்தாவிட்டாலும் கிரிக்கெட்டை சிறப்பாக விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






