பவர்-பிளே ஓவர்களில் அப்படி நடந்தபிறகு, எங்களால் மீளவே முடியவில்லை – நியூசிலாந்து கேப்டன் புலம்பல்!

0
49263

பவர்-பிளே ஓவர்களில் 5 விக்கெட்டுகள் பறிபோனபிறகு, எங்களால் மீளவே முடியவில்லை என வருத்தப்பட்டு பேசியுள்ளார் மிட்ச்சல் சான்டனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. ஷுப்மன் கில் 63 பந்துகளுக்கு 123 ரன்களையும் ராகுல் திரிப்பாதி 22 பந்துகளுக்கு 44 ரன்களையும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்க, இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

சிக்கலான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக பவர்-பிளே ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

நியூசிலாந்து அணியால் கௌரவமான ஸ்கோர் எட்ட முடியாமல், வரிசையாக விக்கெட்டுகள் இழந்து 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மிகப்பெரிய வெற்றியை டி20 போட்டியில் பதிவு செய்தது இந்திய அணி.

வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்த பிறகு பேட்டியளித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர், “இந்த தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது. தொடர் முழுவதும் நன்றாக செயல்பட்டோம். எங்கள் கையில் கோப்பை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங் பவுலிங் பீல்டிங் என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டனர். இந்திய அணியில் குறிப்பிட்ட சிலவீரர்கள் தங்களது சிறந்த பார்மில் இருக்கின்றனர். அதை வெளிப்படுத்தியும் காட்டினார். அதுதான் அவர்களது வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

எங்களது தோல்வி பவர்-பிளே ஓவர்களில் உறுதியாகிவிட்டது. முதல் 6 ஓவருக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தால், எந்த அணியாலும் எளிதில் மீள முடியாது. அப்படி ஒரு நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். அதேபோல் ஆரம்பத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. அதனால் நாங்கள் திணறிவிட்டோம்.

மைதானம் பேட்டிங் செய்ய மாறுவதற்கு முன்பு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது வேலைகளை முடித்து விட்டனர். இதற்கு முன்பு வரை நன்றாக செயல்பட்ட நாங்கள் இன்றைய போட்டியில் சரணடைந்தது மிகுந்த வேதனையை கொடுக்கிறது.” என்றார்.