“என் பவுலிங்க விடுங்க.. சூர்யா பாய் பேட்டிங்தான் பெஸ்ட்.. ஏன்னா காரணம் இருக்கு” – குல்தீப் சிறப்பு பேச்சு!

0
411
Kuldeep

நேற்று தென்னாப்பிரிக்கா மண்ணில் அந்த அணிக்கு எதிராக, மூன்றாவது டி20 போட்டியை வென்று தொடரை இந்திய அணி சமன் செய்தது. நேற்றைய போட்டி தென் ஆப்பிரிக்காவை விட இந்தியாவுக்கு மிக முக்கியமாக இருந்தது.

நேற்றைய போட்டியில் பேட்டியில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் சூரியகுமார் யாதவ் மிக அபாரமாக செயல்பட்டார்கள். ஜெய்ஸ்வால் 41 பந்தில் 60 ரன்கள் எடுக்க, சூரியகுமார் யாதவ் 56 பந்தில் அதிரடியாக 100 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக செயல்பட்டு 2.5 ஓவரில் 17 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார். இவருடன் இணைந்து பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் பேட்டிங்கில் சதம் அடித்த சூரியகுமார் யாதவுக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் அவரே தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். சதத்திற்கு சமமான ஐந்து விக்கெட் கைப்பற்றிய குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை. இதற்கான காரணத்தை குல்தீப் யாதவே கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “சிறிது நாட்கள் கழித்து விளையாடியதால் நான் என் பந்துவீச்சு குறித்து கவலைப்பட்டேன். அதனால் நான் எனது ரிதத்தை பெற விரும்பினேன். இன்று அது சரியாக இருந்தது. பந்து கையில் இருந்து நன்றாக வெளியேறியது மேலும் சூழ்நிலையும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.

- Advertisement -

மிகவும் உண்மையைச் சொல்வது என்றால் இந்த விக்கெட் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இந்த விக்கெட்டில் நல்ல விஷயம் என்னவென்றால் பந்தை பிட்ச் செய்த பிறகு, பந்து வேகமாக செல்கிறது. எனவே நாம் வேகத்தை மாற்றி வீசுவதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இதை சரியாக செய்யும் பொழுது, பேட்ஸ்மேன் உங்களை அடிப்பது கடினம்.

கிரிக்கெட்டில் நீங்கள் விரும்புவது எப்பொழுதும் நடக்காது. நீங்கள் ஒவ்வொரு போட்டியில் இருந்தும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயத்தை எதிர்கால போட்டிகளில் செயல்படுத்த வேண்டும்.

சூர்யா பாய் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவர் பேட்டிங் செய்யும் விதம் பார்ப்பதற்கு மிக நன்றாக இருந்தது. ஏனென்றால் மேலே கூறியது போல ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. பேட்டிங் செய்ய கடினமான சூழ்நிலையில் அவர் விளையாடிய விதம் அற்புதமானது. பேட்டிங் செய்ய எளிதான சூழ்நிலை இல்லாத பொழுது, அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்ப்பது ஒரு விருந்தாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!