இன்னும் சில தினங்களில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி இதற்காக தீவிரமான முறையில் தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி சில முக்கிய கருத்துகளை கூறுகிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐந்தாவது போட்டியின் பாதியில் இருந்து விலகினார். அவருக்கு பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சிறிது காலம் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் பும்ரா இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வது சாத்தியமாகாது என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஜஸ்பிரித் பும்ரா இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் கடைசியாக நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தார். இந்த சூழ்நிலையில் பும்ரா இல்லாமல் போனாலும் மற்றொரு அனுபவ பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் முக்கிய பங்கு வகிப்பார் என பாலாஜி சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
பும்ராவுக்கு முன்பே அணியை சுமந்தவர்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “உண்மையை கூற வேண்டும் என்றால் ஷமி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். பும்ராவை விட நன்றாக செயல்பட்டு இருக்கிறார். பும்ரா ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் ஷமிக்கு அனுபவம் என்பது பெரிய அளவில் உள்ளது. பும்ரா வருவதற்கு முன்பாகவே இந்தியாவின் தாக்குதலை முழுவதும் சுமந்தவர் ஷமிதான்.
இதையும் படிங்க:இந்திய அணி மாதிரி எங்க டீமை நம்ப முடியல.. 3 பிரச்சனைய வச்சுட்டு அரைஇறுதி போறதே சாதனைதான் – கம்ரான் அக்மல்
இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் முகமது ஷமி புதிய பந்தில் நன்றாக செயல்பட வேண்டும். முதல் ஆறு ஓவர்கள் அவர் ஏற்படுத்தும் தாக்கம் இந்திய அணிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. பழைய பந்தில் பெரிய விஷயங்கள் மாறாது, எப்படியும் அது ஒரு தற்காப்பு ஆட்டமாகவே அமையும். அவர் தொடர்ந்து ஆரம்பத்திலேயே களம் இறங்கினால் அது இந்திய அணிக்கு பெரிய ஊக்கம் அளிக்கக்கூடிய விஷயமாகும்” என்று பாலாஜி தெரிவித்திருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் காயம் காரணமாக சமி வெளியேறிய நிலையில் அதற்குப் பிறகு விளையாடப் போகும் ஐசிசி தொடர் இதுவாகும் என்பது குறிப்பிடப்பட்டது.