பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. வருகிற 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மிக முக்கியமான போட்டி தொடர் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அகமல் இந்த இரண்டு அணிகள் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தோல்விகளை தழுவினாலும், அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் சிறப்பான வெற்றிகளை பெற்ற மிகப் பெரிய நம்பிக்கையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. குறிப்பாக அந்த அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கிறார்கள்.
மறுமுனையில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் அணியும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி ஒரு நாள் தொடரை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வி அடைந்தாலும், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பெரிய நம்பிக்கையோடு எதிர்கொள்ளும். இந்த சூழ்நிலையில் தங்களது அணியில் பெரிய ஓட்டைகள் இருப்பதாகவும் இந்திய அணி சிறப்பான நிலையில் இருப்பதாகவும் அதன் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
பல ஓட்டைகள் உள்ளன
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியை பொறுத்தவரை தெளிவான விருப்பமான அணியாக இருக்கிறது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதியான அணியாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை நான் அப்படி சொல்ல முடியாது. பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறினால் நான் அதனை பெரிய சாதனையாக கருதுகிறேன். பாகிஸ்தான் அணி தங்களது வேலையை சிறப்பாக செய்தால் பெரிய உயரத்தை எட்டும், இல்லை எனில் நிச்சயமாக காணாமல் போய்விடும்.
இதையும் படிங்க:IND vs BAN.. இந்திய உத்தேச பிளேயிங் XI.. முக்கிய 1 மாற்றம்.. சாம்பியன்ஸ் டிராபியில் தமிழக வீரர்கள்
எங்கள் அணியில் பல ஓட்டைகள் உள்ளன. பந்துவீச்சு தடுமாறுகிறது சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லை. தொடக்க வீரர்கள் தடுமாறுகிறார்கள், கேப்டன் மற்றும் தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. எனவே விஷயங்கள் எப்படி நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் மீதம் உள்ள அணிகள் சமநிலையில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது என பேசி இருக்கிறார்.