ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம் உட்பட மொத்தம் 3 வீரர்கள் சதம் ; ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் 800 ரன்களுக்கு மேல் அடித்து ஜார்க்கண்ட் சாதனை

0
1551
Jharkhand 880 Runs Ranji Trophy

இந்த ஆண்டுக்கான ரஞ்சி ட்ராபி தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது நாக்-அவுட் சுற்றில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ஜார்க்கண்ட் மற்றும் நாகாலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. கடந்த மார்ச் 12 சனிக்கிழமை அன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நாகாலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய ஜார்கண்ட் அணி 60 ரன்னில் முதல் விக்கெட்டையும் 64 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது விக்கெட்டையும் பறி கொடுத்தது. பின்னர் அந்த அணியின் கேப்டன் சவுரப் திவாரி மற்றும் குமார் சுராஜ் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அவர்களும் ஒரு கட்டத்தில் அவுட் ஆக அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களில் தவித்து வந்தது.

- Advertisement -

அணியை தூக்கி பிடித்தபடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அவுட்டாக, பின்னர் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்களது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். விராட் சிங் 107 ரன்களும், விக்கெட் கீப்பர் குமார் குஷாகுரா அதிகபட்சமாக 266 ரன்களும் ஆல்ரவுண்டர் வீரர் அனுக்குல் ராய் 59 ரன்களும் குவித்தனர்.

இவர்களது ரன் வேட்டையில் அந்த அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு அந்த அணியின் ஸ்கோர் 655 என சிறப்பான நிலையை எட்டியது.

- Advertisement -

பேட்ஸ்மேனாக மாறி அசத்திய பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம்

7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அந்த அணியின் பந்து வீச்சாளரான ஷாபாஸ் நதீம் ஒரு பக்கம் மிக சிறப்பாக விளையாடி வந்தார். எனினும் அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் 9வது வீரராக களமிறங்கிய சுஷாந்த் மிஸ்ரா மற்றும் பத்தாவது வீரராக களமிறங்கி ஆஷிஷ்குமார் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த காரணத்தினால் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 689 ரன்கள் எடுத்த நிலையில் இருந்தது.

பின்னர் ஷாபாஸ் நதீமுடன் இணைந்த பதினோராவது வீரர் ராகுல் சுக்லா அவருக்கு சிறப்பாக ஈடுகொடுத்தார். ராகுலும் தன்னால் முடிந்தவரை ரன் குவிப்பில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் இணைந்து பத்தாவது விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தனர். கடைசி விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 200 ரன்கள் குவித்தது அனைவரின் புருவத்தையும் உயர வைத்தது.குறிப்பாக பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் 304 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் உட்பட 177 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஜார்கண்ட் அணி குவித்த இமாலய ஸ்கோர்

முதல் இன்னிங்ஸ் முடிவில் ஜார்கண்ட் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 880 ரன்கள் குவித்தது. இமாலய ஸ்கோரை ஜார்கண்ட் அணி பதிவு செய்த பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய அந்த அணி இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறது. தற்பொழுது நாகாலாந்து அணி ஜார்கண்ட் அணியை விட 750 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -