இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு வருடம் கழித்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு குல்தீப் யாதவுக்கு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பில் அவர் தான் யார்? என்று காட்டியிருக்கிறார்.
கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் முதல் போட்டியில் இருந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
அடுத்த ஷேன் வார்ன்
இந்த நிலையில் கிரிக்கெட் வல்லுனர்கள் ஆஸ்திரேலியா அணிக்காக உலகின் தலைசிறந்த மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் அனைத்து போட்டிகளிலும் விளையாடியது போல இந்திய அணிக்காக குல்தீப் யாதவ் விளையாட வைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்கள்.
மேலும் தற்காலத்தில் குல்தீல் யாதவ் மட்டுமே மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளராக தலைசிறந்தவராக இருப்பதாகவும் கூறியிருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக சாதனை படைத்திருந்தார்.
மேஜிக் பந்து
இன்று பந்துவீச்சுக்கு வந்த குல்தீப் யாதவ் தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப்பை அற்புதமாக ஏமாற்றி கிளீன் போல்ட் செய்து அனுப்பினார். ஆப் ஸ்டெம்புக்கு மிகவும் வெளியில் விழுந்த பந்து அங்கிருந்து சுழன்று உள்ளே வந்து ஸ்டெம்பை தாக்கியது. வழக்கமாக ஷேன் வார்ன் இப்படியான முறையில் விக்கெட்டுகளை கைப்பற்றுவார்.
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்.. ஸ்டார்க்கை தாண்டி சிராஜ் அசத்தல் சாதனை.. பாதி அணியை அனுப்பினார்கள்
அதைப்போலவே குல்தீப் யாதவ் இந்த விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் இவர் மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர் என்கின்ற காரணத்தினால் பந்துக்கு நல்ல திரும்பும் வகையிலான சுழற்சியை கொடுக்க முடியும். எனவே எந்த கண்டிஷனிலும் எந்த மாதிரியான ஆடுகளத்திலும் இவரால் பந்தை திருப்ப முடியும். மேலும் காற்றிலும் பந்தை நிறுத்த முடியும். இதன் காரணமாக எந்த சூழ்நிலையிலும் இவரால் தாக்கத்தை கொடுக்க முடியும். எனவே இவரை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.






