ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், காயத்தில் இருந்து மீண்டு வரும் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.
வாஷிங்டன் சுந்தர் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் காயமடைந்தார். அதன்பின் எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் ஃபிட்னஸ் கிளியரன்ஸ் அடிப்படையில் நேரடியாகத் தேர்வாகி இருப்பது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அணித் தேர்வில் வீரர்களின் மேட்ச் ஃபிட்னஸ் மிகவும் முக்கியமானது. ஆனால், அதை நிரூபிக்காமல் நேரடியாக சர்வதேசக் போட்டிகளில் ஒரு வீரரைத் தேர்வு செய்வது அணியின் ஃபார்மை பாதிக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து கே ஸ்ரீகாந்த் பேசும்போது “டெஸ்ட் போட்டிகளில் அவர் நன்றாக விளையாடுகிறார், ஆனால் சமீபத்தில் இலங்கையில் நடந்த தொடரில் ஆடவில்லை. இரண்டு வாரங்களில் அவர் எப்படி ஃபிட் ஆனார்? மேட்ச் ஃபிட்னஸ் நிரூபிக்காமல் அணியில் இடம் பெறுவதில் என்ன பயன்? இந்திய அணிக்குத் தேர்வாகும் முன் ஏதேனும் ஒரு போட்டியில் ஆடி ஃபிட்னஸை நிரூபிக்க வேண்டும்.” என்று தொடங்கி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “வெறும் டாக்டர் சர்டிஃபிகேட் வைத்துக்கொண்டு விளையாட முடியாது. வாஷிங்டன் சுந்தர் இரண்டு மூன்று சீரிஸ்களுக்குப் பிறகு காயமடைந்து விடுகிறார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் அவரது பந்துவீச்சை அடித்து நொறுக்கி விட்டார்கள். டிட்வெண்டிடிவெண்டி ஃபார்மட்டில் இருந்து கிரிக்கெட்டை தொடங்கியவர், ரெட் பால் கிரிக்கெட்டிற்கு சிறப்பாக மாறினார். ஆனால் வைட் பால் கிரிக்கெட்டில் தனது ரிதமை இழந்துவிட்டார்.” என்று கூறி இருக்கிறார்.






