தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனிக்கு வயதான காரணத்தினால் பிட்னஸ் இல்லை எனவும் அதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனவும் இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி கடைசி நேரத்தில் 17 பந்துகளை சந்தித்து 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு கட்டத்தில் 210 முதல் 220 ரன்கள் எடுக்க முடியும் என்ற நிலையில் இருந்த சிஎஸ்கே அணி கடைசியாக 187 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக அந்த அணி தோல்வியும் அடைந்து பத்தாவது இடத்தில் பரிதாபமாக தொடர்கிறது.
சொல்லிவிட்டு கிளம்ப வேண்டும்
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “தோனிக்கு வயதாகிவிட்டது. எனவே அவரிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் நீங்கள் தொடர்ந்து விளையாட வந்து நிலைமையை குழப்பவும் முடியாது. உங்களால் செய்ய முடியாது என்றால் முடியாது என்று சொல்லிவிட்டு விலகிச் செல்லுங்கள். இந்த அழைப்பை தோனி மட்டுமே எடுக்க முடியும். அவர் தொடர்ந்து விளையாடினால் கேப்டன் விக்கெட் கீப்பர், பினிஷர், எந்த ரோலில் விளையாடுவார்?”
“நியாயமாகச் சொன்னால் அவருடைய அனிச்சை குறைந்துவிட்டது. அவருடைய முழங்கால்கள் தளர்ந்து இருக்கலாம். வயதாகின்ற காரணத்தினால் இதுவெல்லாம் இயல்பாகவே நடக்கும். இப்படியான நிலையில் சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டரும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது”
தோனி பினிஷர் இல்லை
“சிஎஸ்கே அணியின் இன்றைய பிரச்சனை என்னவென்றால் தோனி அவரது வேலையை சரியாக செய்ய முடியவில்லை. மீண்டும் மீண்டும் சுழல் பந்துவீச்சாளர்கள் அவரைக் கட்டி போடுகிறார்கள். ஒரு காலத்தில் அவர்களை அவர் ஸ்டாண்டுக்கு வெளியில் அடிப்பார். நியாயமாகச் சொன்னால் தோனி போராடி வருகிறார்”
இதையும் படிங்க : நாங்க நினைச்ச அந்த விஷயம் நடந்துடுச்சு.. ஆனா எங்க பசங்க இதை மட்டும் எப்பவும் செய்யணும் – தோனி பேச்சு
“இங்கு ஃபினிஷர் என்றால் யார்? சாய் சுதர்சன் போல ஆரம்பத்திலேயே வந்து பொறுப்பை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை முடிப்பதும் இல்லை பத்தாவது ஓவரில் வந்து இறுதி வரை நின்று ஷஷான்க் சிங் போல ஆட்டத்தை முடிப்பதும்தான் பினிஷர் என்று சொல்லப்படும். கடைசி நான்கு ஓவர்களுக்கு வந்து செய்யக்கூடியதை பினிஷிங் என்று சொல்ல முடியாது குளோசிங் என்று வேண்டுமானால் சொல்லலாம்” என்று கூறியிருக்கிறார்.