நேற்று தென் ஆப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தை தாங்களே கேட்டு வாங்கியதாக கம்பீர் கூறி இருந்தது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
கொல்கத்தாவில் இந்த ஆடுகளம் மிக மோசமானது கிடையாது எனவும், இது பேட்ஸ்மேன்களின் திறமை சம்பந்தப்பட்டது கிடையாது மனநிலை சம்பந்தப்பட்டது என்றும் கம்பீர் கூறியிருந்தார். இந்த நிலையில் மோசமான ஆடுகளத்தை கொடுத்துவிட்டு அதை நியாயப்படுத்தி கம்பீர் பேசக்கூடாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இதில் எப்படி விளையாட?
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “எனக்கு இதில் புரியாத ஒரு விஷயம் என்னவென்றால், இந்த ஆடுகளத்தில் எந்த பேய்களும் கிடையாது நீங்கள் உங்கள் நுட்பத்தை காட்ட வேண்டும் என்று கம்பீர் சொன்னார். இப்படிப்பட்ட ஒரு விக்கெட்டில் எப்படி விளையாட முடியும்? எல்லா பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை தற்காத்துக் கொள்ள விளையாடி, ஸ்லிப் அல்லது எல்பிடபிள்யு ஆனார்கள். இப்படி இருக்க இதில் என்ன நுட்பத்தை காட்டி விளையாடுவது?”
“மேலும் இது எதிர்கொள்ள முடியாத பலமான பேட்டிங் வரிசையை கொண்ட தென் ஆப்பிரிக்க அணி கிடையாது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆடுகளத்தை கொடுத்துவிட்டு நீங்கள் வீரர்களின் நுட்பத்தை எப்படி குறை சொல்வீர்கள்? இது மிகவும் தவறான விஷயம். உங்களால் எப்படி இந்த விக்கெட்டில் தப்பித்து விளையாட முடியும்? பவுமா அரை சதம் அடித்தார். ஆனால் இரண்டு அணிகளிலும் அந்த ஒரே வீரர் மட்டும்தான் அப்படி விளையாடினார்”
கம்பீர் பேசுவது அபத்தம்
“இது நாங்கள் கேட்ட ஆடுகளம்தான் என்று கம்பீர் கூறினார். நாம் பல வருடங்களாக இப்படி விளையாடியும், இதிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆடுகளத்தில் பந்து மாறிக்கொண்டே இருந்தது. இதில் எல்லாமே தவறாக இருந்தது. நான் ஸ்டெம்பை நோக்கி பந்து வீசி இருந்தால் கூட இந்த ஆடுகளத்தில் விக்கெட் எடுத்து இருப்பேன்”
இதையும் படிங்க : இந்திய அணி தோல்விக்கு தகுதியானது.. ஏன்னா அவங்க பண்றதுக்கு இது நடக்கணும் – மைக்கேல் வாகன் விமர்சனம்
“இது ஒரு மோசமான ட்ராக். இதில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாது. ஒரு அணி கூட நல்லறங்கள் எடுக்கவில்லை என்றால் இதை எப்படி நீங்கள் நல்ல விக்கெட் என்று சொல்ல முடியும்? கம்பீர் மிகவும் அபத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். இதில் இரண்டு அணி வீரர்களுமே சிரமப்பட்டார்கள். கம்பீர் அழுத்தத்தில் இருக்கிறாரோ இல்லையோ இந்திய அணி அழுத்தத்தில் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






