எங்களது சிஇஓ பற்றி அன்று நான் அப்படிக் கூறவில்லை, நான் கூற வந்த விஷயம் இதுதான் – கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்

0
31

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடிக் கொண்டிருக்கிறது. அந்த அணிக்கு மீதம் இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் கடந்த இரண்டு போட்டிகளில் அந்த அணி மிகப் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 9ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 52 ரன்கள் வித்தியாசத்திலும், கடந்த 14ம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

அணி தேர்ந்தெடுப்பில் ஈடுபடும் கொல்கத்தா சிஇஓ வெங்கி மைசூர்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடந்த முடிந்த பின்னர், கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறிய ஒரு விஷயம் சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று அவர் கொல்கத்தா அணியை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் ஈடுபடுவார், என்று கூறினார்.

அவர் அன்று அவ்வாறு கூறிய விஷயம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியை எழுப்பியது. அணி தேர்ந்தெடுப்பதில் கோச் மற்றும் கேப்டனை தாண்டி சிஇஓ எப்படி பங்கெடுத்துக் கொள்ள முடியும் என்பது போன்ற கேள்விகள் எழுந்தன.

தான் கூறியதை மீண்டும் விளக்கிய ஸ்ரேயாஸ் ஐயர்

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்ற பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் தான் கூறிய விஷயத்தை மீண்டும் ஒருமுறை விளக்கிக் கூறினார்.”அன்று நான் கூறிய விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முறையான விளக்கத்தை கொடுக்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு போட்டி நடைபெறுவதற்கு முன்பு, அணியில் விளையாட வீரர்களிடம் நேரடியாகச் சென்று கோச் பிரண்டன் மெக்கல்லம் விஷயத்தை கூறுவார். அப்பொழுது எங்களுடன் இருக்கும் எங்கள் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் அந்த வீரர்களிடத்தில் சென்று அவர்களை ஆறுதல் படுத்துவார்.அதையே நான் அன்று அவ்வாறு கூறியிருந்தேன் என்று
ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி மீதமிருக்கும் ஒரு போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். அதேபோல பெங்களூரு அணி மீதமிருக்கும் ஒரு போட்டியில் மிகப் பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் தோல்வி பெற வேண்டும்.

மறுபக்கம் ஹைதராபாத் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மீதம் இருக்கும் அனைத்து போட்டியிலும் தோல்வி பெற வேண்டும். இந்த அணிகள் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றாலும், அந்த ஒரு போட்டியில் மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தை வெற்றி பெறாமல் இருக்க வேண்டும். இவை எல்லாம் நடைபெறும் பட்சத்தில் கொல்கத்தா அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.