நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் தோல்வி அடைந்த விதம் குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்கியா ரகானே சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
குஜராத் கொல்கத்தா மோதல்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மான்கில் 55 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். இதில்10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். அதற்குப் பிறகு அணியின் மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சன் 52 ரன்கள், ஜாஸ் பட்லர் 41 ரன்கள் குவித்தனர்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் இருவரும் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேற, அந்த அணியின் கேப்டன் ரகானே சிறப்பாக விளையாடி 36 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் யாருமே சிறப்பாக விளையாடாத நிலையில் இறுதிக்கட்டத்தில் ரகுவன்சி 13 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இருப்பினும் கொல்கத்தா அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பயமின்றி விளையாட வேண்டும்
இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் தோல்வி குறித்து அதன் கேப்டன் ரகானே கூறும்போது “இந்த ஆடுகளத்தில் 199 ரன்கள் என்பது வெற்றி பெறக் கூடிய இலக்கு தான் என்று நினைத்தேன். ஒரு கட்டத்தில் நாங்கள் சிறப்பாக பந்து வீசி மீண்டும் போட்டிக்குள் வந்தோம். எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் தொடக்க இடத்தில்தான் தொடர் முழுவதும் தடுமாறி வருகிறோம். இன்றைய ஆடுகளம் மெதுவாகத்தான் காணப்பட்டது அதனால் குஜராத் அணியை 220 ரன்களில் சுருட்ட வேண்டும் என்று நினைத்தோம்.
இதையும் படிங்க:நம்பர் 1 அரியணையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த கில்லின் படை.. ரகானேவின் கேகேஆர் பரிதாபம்.. 38 ரன்னில் தோல்வி
நாங்கள் இன்னும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்ய வேண்டும். குறிப்பாக எங்கள் பேட்டிங்கின் நடு வரிசையில் தடுமாறி வருகிறோம். மேலும் எங்கள் தொடக்கமும் சிறப்பாக அமைய வேண்டும். எங்கள் பந்துவீச்சாளர்கள் எந்த பிரச்சினையும் இல்லை அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பீல்டிங் மூலம் 15 முதல் 20 ரன்கள் வரை கட்டுப்படுத்த முடியும். எனவே அதிலும் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். டி20 கிரிக்கெட்டில் பயம் இன்றி விளையாட வேண்டும். கடந்த காலங்களில் நடந்தவற்றை யோசித்துப் பார்க்கக் கூடாது. அவுட் ஆகி விடுவோமா என்று நினைத்து விளையாடினால் அதன்படி தான் நடக்கும். பவுண்டரி அடிப்பேன் என்று நினைத்து விளையாடினால்தான் உத்வேகமாக விளையாடுவீர்கள். எங்கள் பேட்ஸ்மாங்களுக்கு நான் கூறிக் கொள்வது ஒன்றுதான் பயம் இன்றி விளையாட வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.






