நாளை இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்களை சீக்கிரத்தில் அவுட் செய்வது குறித்து நியூசிலாந்து கேப்டன் பேசி இருக்கிறார்.
இந்திய அணியின் முன்னணி பேட்டர்களைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவது குறித்து நியூசிலாந்து அணி தீவிரமாக யோசித்து வருகிறது. ஆடுகளத்தின் தன்மையை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்று அந்த அணி திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழல் குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்டனர் பேசும்போது “ஒவ்வொரு போட்டியிலும் தொடக்கத்திலேயே அவர்களை வீழ்த்த நாங்கள் முயற்சிப்போம். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி, நடுப்பகுதியில் நல்ல ஸ்கோரை ஏற்படுத்தி, இறுதியில் பவர் ஹிட்டர்களைக் களமிறக்குவதுதான் அவர்களின் திட்டம்” என கூறி இருக்கிறார்.
தொடர்ந்து அவர் மேலும் பேசும்போது “ஃப்ரண்ட் புட்டில் ரோகித் சர்மாவுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச எதிரணி அணிகள் முன்பு முயன்றன. ஆனால் இப்போது அவர் அந்தப் பந்துகளை சிக்சருக்கு பறக்க விடுகிறார். அணியின் ஆங்கராக விராட் கோலி தெளிவாகச் செயல்படுகிறார். அவர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் வயது முதிர்ந்து வந்தாலும் கூட, இன்னும் மிகச் சிறப்பாகவே விளையாடி வருகிறார்கள்” என கூறி இருக்கிறார்.