“கோலி திரும்பி வந்தாச்சா.. 2வது டி20 போட்டியில் ஆடுவாரா..?” – சிவம் துபே கொடுத்த பதில்

0
631

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி  1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் பங்கு பெறாத விராட் கோலி இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து தெரியவில்லை. இரண்டாவது போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றியைப் பெற கடுமையாக போராடும்.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் ஆல் ரவுண்டர் சிவம் துபே. இவர் பந்து வீச்சில் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் பேட்டிங்கிலும் 40 பந்துகளில் 5 பவுண்டரி இரண்டு சிக்சர்களுடன் 60 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இவரின் இந்த ஆல்ரவுண்டர் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

- Advertisement -

சிவம் துபே இந்திய அணியில் முன்னரே இடம் பிடித்திருந்தாலும் நிரந்தர இடத்தைப் பிடிக்க முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவர் மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்தது. அந்த நம்பிக்கையை உண்மையாக்கும் விதமாக யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியான பங்களிப்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இவரின் பவர் ஹிட்டிங் திறன் சென்னை அணிக்கு பெரும் உதவியாய் அமைந்துள்ளது.

இவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக நின்ற இடத்தில் இருந்து கால்களை பெரிதாக நகர்த்தாமல் பந்தை சிக்சருக்கு அடிப்பதில் வல்லவர். எனவே உலகக்கோப்பை தொடர்க்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால் அனைத்து வீரர்களும் தங்கள் முத்திரையைப் பதிக்க விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது அந்த பட்டியலில் சிவம் துபேவும் தனது விருப்பத்தினைத் தெரிவித்துள்ளார்.

தனது சொந்த காரணங்களுக்காக முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி அடுத்த போட்டியில் களமிறங்குவது குறித்தும், இந்திய அணித் தொடருக்கு தயாரான விதம் குறித்தும் சிவம் துபே பத்திரிகையாளர் சந்திப்பில் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது
“கடந்த போட்டியில் எனது பங்களிப்பு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஆட்டங்களிலும் இதுபோல சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன். பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் கடினப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

- Advertisement -

டி20 உலக கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உள்ளது. ஆனால் அதற்காக இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. அதுகுறித்து பெரிதாக நினைக்காமல் இந்த தொடரில் சிறப்பாக பங்களிக்கவே முயற்சி செய்கிறேன். வரவிருக்கும் 2024 ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானது. அதுதான் இந்திய அணிக்குள் வர மிகப்பெரிய அடித்தளம்.

முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி தற்போது அணிக்குள் இணைந்து விட்டார். இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா என்பதை அணி நிர்வாகமே முடிவு செய்யும்” என்று கூறி இருக்கிறார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டி20 அணிக்குத் திரும்புகிறார் விராட் கோலி. வரும் உலக கோப்பைத் தொடரில் இவரின் அனுபவம் மற்றும் பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியமானது. எனவே ஆப்கானிஸ்தான் அணியுடனான எஞ்சிய இரு டி20 போட்டியிலும் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.