தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் தோல்விகள் குறித்து இந்திய லெஜெண்ட் கபில் தேவ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்திய அணி தொடர்ந்து தோல்விகள் அடைந்து வருகின்ற இந்த காலகட்டத்தில் அணிக்குள் நிறைய விஷயங்கள் சென்று கொண்டிருப்பதாகவும், இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஆகியோரிடம் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
கம்பீருக்கு ஏற்பட்டிருக்கும் பெரிய நெருக்கடி
இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற காலகட்டத்தில் சில தோல்விகள் ஏற்பட்டது. அப்போது ஆசியக் கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வெல்ல முடியாமல் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியிருந்தது. பிறகு பங்களாதேஷிலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இப்படி எல்லாம் இருந்த போதும் ராகுல் டிராவிட் பயிற்சியில் இந்திய கிரிக்கெட் தெளிவான முறையில் பயணித்தது. தேவைக்கு சிறந்த வீரர்களை அடையாளம் கண்டது. குறிப்பாக எந்த அணி விளையாடும் என்கின்ற தெளிவு அவர்களிடம் இருந்தது. மேலும் சரிவு ஏற்பட்டால் அதற்கு தீர்வுகளை கண்டறிய வேலைகள் நடந்தது. தற்போது இதெல்லாம் கம்பீர் தலைமையில் நடைபெறாதது போல் தோற்றமளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கபில் தேவ் தந்த விளக்கம்
இதுகுறித்து இந்திய லெஜன்ட் கபில் தேவ் பேசும்பொழுது “கம்பீர் மீது எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. களத்தில் பயிற்சியாளரான கம்பீர் சென்று விளையாட முடியாது. களத்தில் வீரர்களும் கேப்டனும்தான் இருக்கிறார்கள். ஒரு புதிய பயிற்சியாளர் சொந்த திட்டங்களுடன் அணிக்குள் வருகிறார். அது சிறந்த முறையில் வேலை செய்யும் பொழுது பிரச்சனை இல்லை. இல்லையென்றால் மக்கள் கேள்வி கேட்க தொடங்குகிறார்கள்”
இதையும் படிங்க : விராட் கோலி முன்னிலையில்.. மோர்கலை கண்டித்த கம்பீர்.. பிசிசிஐ தரப்பில் கசிந்த தகவல் – வெளியான செய்தி
“கம்பீர் கொஞ்சம் ஆட்டிடியூட் கொண்ட நபர்தான். அவர் ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி போன்ற பயிற்சியாளர் கிடையாது. ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் தனிப்பட்ட சிந்தனை வழிமுறை இருக்கிறது. எனவே கம்பீருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்கலாம். அவர் சிறந்த முறையில் செயல்படுவார் என்று நம்பலாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.






