இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்க வேண்டும் என்றும், தற்பொழுது மிகவும் உடல்நிலை மோசமாக இருக்கும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ஒருவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உதவி செய்ய வேண்டும் எனவும் கபில்தேவ் நிறைய கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.
இந்திய அணிக்காக 1975 முதல் 87 ஆம் ஆண்டு வரையில் விளையாடியவர் அன்சுமன் கெய்க்வாட். இவர் இந்தியாவுக்காக 48 டெஸ்ட் மற்றும் 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2000 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். மேலும் இந்திய கிரிக்கெட் தேர்வாளராகவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் பெரிய பங்களிப்பை செய்திருக்கும் இவர் தற்போது 71 வயதான நிலையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக லண்டனில் கிங்ஸ் காலேஜ் ஹாஸ்பிடல் இல் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் உதவிகள் செய்ய வேண்டும் என கபில் தேவ் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இது குறித்து கபில் தேவ் பேசும் பொழுது “இது சோகமானது மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தக் கூடியது. நான் அவருடன் சேர்ந்து விளையாடுகிறேன். எனவே அவர் இருக்கும் நிலை எனக்கு மிகுந்த வலியைக் கொடுக்கிறது. அவரைஇந்த நிலையில் என்னால் பார்க்க சகிக்கவில்லை. இதற்காக யாரும் கஷ்டப்படத் தேவையில்லை இந்திய கிரிக்கெட் வாரியம் பார்த்துக் கொள்ளும் என்று தெரியும். எனவே அவர்கள் இதற்காக முன் வர வேண்டும்.
அவருக்கு செய்யப்படும் உதவிகள் இதயத்தில் இருந்து வர வேண்டும். அவர் விளையாடிய காலத்தில் மூர்க்கமான வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடி உடம்பில் மார்பில் அடிகள் வாங்கினார். இப்போது நாம் அவருக்காக நிற்க வேண்டிய நேரம். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை விட்டுத் தர மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அவருக்கான பிரார்த்தனைகள் தொடர வேண்டும்.
இதையும் படிங்க : பெண்கள் ஆசிய கோப்பை.. இந்தியா பாகிஸ்தான் போட்டி.. இலங்கை கிரிக்கெட் செய்த செயல்.. கூடிய எதிர்பார்ப்பு
இன்றைய கால வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் வரை நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஆனால் எங்கள் காலத்தில் அப்படி எதுவும் இல்லை. எனவே முன்னாள் வீரர்களுக்கு என ஒரு அறக்கட்டளையை பிசிசிஐ துவங்க முடியும். இது காலத்தின் தேவையாக இருக்கிறது. நாங்களும் எங்களால் முடிந்த அளவில் இதற்கான பண உதவியை செய்வோம். துரதிஷ்டவசமாக எங்களுக்கு ஒரு அமைப்பு இல்லாமல் போனது வருத்தப்படத்தக்கது. எனவே முன்னாள் வீரர்களின் எதிர்காலத்திற்கான அறக்கட்டளை துவங்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






