இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியின் போது இரு அணி ரசிகர்களும் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் எனவும், இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் கம்பீர் மிகவும் நல்லவர் எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறியிருக்கிறார்.
இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவிவரும் நிலையில் கிரிக்கெட் போட்டியில் மோதிக்கொள்ள இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பும் பரபரப்பும் போட்டியை சுற்றி இருந்து வருகிறது. மைதானத்தில் இருநாட்டு வீரர்களிடையேவும் பெரிய நட்பை பார்க்க முடியாது. இந்த நிலையில் களத்திற்கு வெளியே ரசிகர்கள் எல்லை மீறாமல் இருப்பது அவசியம்.
இதுகுறித்து கம்ரன் அக்மல் கூறும் பொழுது “இந்தியா பாகிஸ்தான் உறவில் இது பதட்டமான நேரம். இதனால் அச்சங்கள் இருக்கிறது. இந்த போட்டி நல்ல முறையில் நடந்தால் சிறப்பானதாக இருக்கும். இருநாட்டு ரசிகர்களும் பெரிய மனதுடன் ஒன்று கூடி போட்டியை ரசிக்க வேண்டும். கடந்த காலங்களைப் போலவே சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும். இரு நாட்டு ரசிகர்களும் எல்லை மீறக் கூடாது”
“இந்தியா பாகிஸ்தான் போட்டியின் அழகே வெளிப்படும் ஆக்ரோஷம்தான். ஆனால் ஆக்ரோஷத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்பது தான் முக்கியம். கிரிக்கெட் ஜென்டில்மேன் களின் விளையாட்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டால் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் எந்தவித தொல்லையும் இல்லாமல் நடக்கும்”
” கடந்த ஆண்டு ஓமனில் வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான நடைபெற்றது. இதில் அபிஷேக் ஷர்மா மற்றும் பாகிஸ்தானின் சுபியான் இருவர் இடையே வாய் வாக்குவாதம் முற்றியது. இப்படி ஆக்ரோஷம் எப்படியும் இருக்கும். எனவே அதை எப்படி கட்டுக்குள் வைத்துக் கொள்வது என்று பார்த்துக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்ல இருக்க இந்த விஷயம்.. நம்ம பாகிஸ்தான் கிரிக்கெட்ல இல்ல.. பிரச்சனை இதுதான் – உமர் குல் கருத்து
“கம்பீர் மிகவும் நல்லவர். ஏ அணிகளின் நாங்கள் கென்யா சென்று இருந்த பொழுது நல்ல நண்பர்களாக மாறினோம். இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை என்பது புரிதல் இல்லாமல் வந்தது. அவர் ஒரு ஷாட்டை தவற விட்டுவிட்டு தனக்குள்ளே ஏதோ பேசிக் கொண்டிருந்தார். நான் அவர் என்னை ஏதோ சொல்லி விட்டதாக நினைத்துக் கொண்டேன். இப்படித்தான் அந்த நேரத்தில் அந்த பிரச்சனை புரிதல் இல்லாமல் வந்தது. மற்றபடி அவர் மிகவும் நல்லவர்” என்று கூறி இருக்கிறார்.