இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான கமிந்து மெண்டிஸ் விசித்திரமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இலங்கை அணியில் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துவரும் கமிந்து மெண்டிசை ஹைதராபாத் அணி வாங்கியது. இந்த நிலையில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஜீசன் அன்சாரியால் வந்த வாய்ப்பு
ஹைதராபாத் அணிக்கு கடந்த இரண்டு போட்டிகளாக ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா விளையாடி வந்தார். இந்த நிலையில் ஹைதராபாத் கடந்த போட்டியில் இந்திய இளம் லெக் ஸ்பின்னர் ஜீசன் அன்சாரிக்கு அறிமுக வாய்ப்பை கொடுத்தது. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஹைதராபாத் அணி பிளேயிங் லெவலில் வெளிநாட்டு வீரரான ஆடம் ஜாம்பா இன்றைய போட்டியில் நீக்கப்பட்டார். அவருடைய இடத்தை ஜீசன் அன்சாரி பிடித்தார். இதன் காரணமாக காலியாக இருந்த வெளிநாட்டு வீரருக்கான இடத்தில் கமிந்து மெண்டிஸ் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியிலேயே ஐபிஎல் வரலாறு முதல் வீரராக சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.
கிரிக்கெட்டில் அரிய வீரர்
கமிந்து மெண்டிஸ் வலது கை இடது கை என இரண்டு கைகளிலும் பந்து வீசும் அரிய திறமை பெற்றவர். இந்த நிலையில் இன்று அவர் ரகுவன்சிக்கு இடது கையிலும் வெங்கடேஷ் ஐயருக்கு வலது கையிலும் சுழல்பந்து வீச்சை வீசினார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ரகுவன்சி விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையும் படிங்க : 4 வருஷம் ஆச்சு.. இந்த ஒரு பாலை சரியா வீச.. யார்கிட்டயும் இல்லாத டெக்னிக் இது – சாய் கிஷோர் உடைக்கும் சீக்ரெட்
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இரண்டு கைகளாலும் பந்து வீசிய பந்துவீச்சாளராகவும், மேலும் இந்த முறையில் பந்து வீசி ஐபிஎல் தொடரில் முதல்முறையாக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் விசித்திரமான சாதனையை படைத்திருக்கிறார். அவரது இந்த அரிய திறமை கிரிக்கெட் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. விக்கெட் கைப்பற்றிய அவருக்கு ஐபிஎல் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.






