ஜானி பேர்ஸ்டோ இவ்வளவு அதிரடியாக ஆடியதற்கு இவர் தான் காரணம் ! விராட் கோலியை குற்றம்சாட்டியுள்ள விரேந்தர் சேவாக்

0
222
Virender Sehwag and Jonny Bairstow

இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியோடு பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் நகரில் ஜூலை 5ஆம் தேதி முதல் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

இந்திய தனது முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை 98 ரன்களுக்குள் இழந்து, ரிஷாப் பண்ட் மற்றும் ஜடேஜாவின் சதங்களால் 416 ரன்களை குவித்தது. இதற்கடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியும், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 84 ரன்களுக்கு ஐந்த விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ களத்தில் இருந்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோ 47 பந்துகளில் 12 ரன்களையே அடித்திருந்தார். இதற்கடுத்தும் அவர் பெரிதாய் தடுமாறியே ஆடினார். அவர் 65 பந்தில் 16 ரன்களை அடித்திருக்கும் பொழுது, விராட் கோலி அவரைச் சீண்ட, நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்தது. அடுத்து 81 பந்துகளில் அரைசதத்தையும், 119 பந்துகளில் சதத்தையும் அடித்து அசத்தினார். 2016க்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக வேகமாக அடிக்கப்பட்ட டெஸ்ட் சதம் இதுவாகும்.

விராட் கோலியின் இந்தச் சீண்டலைப் பல முன்னாள் வீரர்கள் நகைச்சுவையாக ட்வீட் செய்துவருகிறார்கள். மேற்கிந்திய முன்னாள் வீரர் இயான் பிஷப் தனது ட்வீட்டில் “தயவுசெய்து ஜானி பேர்ஸ்டோவை மீண்டும் யாரும் சீண்டாதிர்கள்” என்றிருக்கிறார்.

நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் தனது ட்வீட்டில் “ஜானியை எதிர் அணிகள் ஏன் கோபப்படுத்துகிறார்கள். இதனால் அவர் பத்து மடங்கு சிறப்பாக ஆடுகிறார். தினமும் காலையில் அவருக்கு ஒரு பூக்கூடையைப் பரிசாகக் கொடுங்கள். அவர் காரை பற்றிப் புகழுங்கள். அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க எதையும் செய்யலாம்” என்று எழுதியிருக்கிறார்.

- Advertisement -

முன்னாள் இந்திய வீரர் சேவாக் தனது ட்வீட்டில் “விராட் கோலி ஜானியை ஸ்லெட்ஜிங் செய்யும் முன் அவரது ஸ்ட்ரைக் ரேட் 21. ஸ்லெட்ஜிங் செய்த பிறகு 150. புஜாரா போல் விளையாடியவரை ஸ்லெட்ஜிங் செய்து ரிஷாப் பண்ட் போல் விளையாட வைத்துவிட்டார் விராட்கோலி” என்று கூறியிருக்கிறார்!