இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் அரை சதம் அடித்து தற்போது உலக சாதனை படைத்திருக்கின்றார். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் முதலில் இந்திய அணி 358 ரன்கள் ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி வந்தது.
225 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் மூன்றாவது ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடங்கியது. இதில் ஜோ ரூட் மற்றும் ஆலி போப் ஆகியோர் அபாரமாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதனால் மதியநேர உணவு இடைவெளியின் போது இங்கிலாந்து அணி 75 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்த சூழலில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஆறாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றார். 13 ஆயிரத்து 288 ரன்கள் அடித்த ராகுல் டிராவிட் சாதனையையும், 13,289 ரன்கள் அடித்த காலிசின் சாதனையும் ஜோ ரூட் முறியடித்திருக்கின்றார்.
மேலும் மான்செஸ்டர் கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கின்றார். தற்போது ஜோ ரூட்டுக்கு முன்பு ரிக்கி பாண்டிங் 13,378 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும்,சச்சின் டெண்டுல்கர் 15921 ரன்கள் உடன் முதலிடத்திலும் உள்ளனர்.
இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார். காலிஸ், பாண்டிங் ஆகியோர் 103 முறை 50 ரன்கள் மேல் அடித்த நிலையில், தற்போது ஜோ ரூட் 104 முறை 50 ரன்கள் மேல் அடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: கில் பண்ணின அது ஆரம்பத்திலிருந்தே எனக்கு பிடிக்கல.. பும்ராவுக்கு செஞ்சது தப்பு – ரிக்கி பாண்டிங் கருத்து
இந்த பட்டியலில் முதல் இடத்தில் டெண்டுல்கர் 119 முறை 50 ரன்கள் மேல் அடித்து இருக்கின்றார். இதேபோன்று இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐம்பது ரன்கள் மேல் குவித்த வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்திரபால், ரிக்கி பாண்டிங் ஆகியோர் 14 முறை அடித்து இருந்த நிலையில் தற்போது ஜோ ரூட் 15 முறை அடித்து இருக்கின்றார்.