2022 ஐ.பி.எல் ஏலத்தில் நான் பங்கேற்காததற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி தான் காரணம் – ஜோ ரூட் பேட்டி

0
571
Joe Root not Participating in IPL Auction

இங்கிலாந்து அணி தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் விளையாடி முடித்து உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தத் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் இருந்தன. அவற்றுள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் இங்கிலாந்து அணி பரிதாபமாக தோல்வி கண்டுள்ளது. டிரா செய்யப்பட்ட ஒரே போட்டியும் 9 விக்கெட்டுகளை இழந்து கடைசி நேரத்தில் டிரா செய்யப்பட்டது தான். அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் தொடருக்கு முன்பு சிறந்த பார்மில் இருந்த போதும் இங்கிலாந்து அணியின் தோல்வியை அவரால் தவிர்க்க முடியவில்லை.

அந்த அணியின் இந்த தோல்விக்கு வீரர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற காரணம்தான் பலரால் கூறப்பட்டது. தற்போது இருக்கும் வீரர்களின் கவனம் முழுக்க டி20 லீகுகளில் தான் இருக்கிறது என்றும் பல முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதால் தான் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் பேசி இருந்தனர்.

- Advertisement -

இதற்கு நடுவில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போகிறார் என்ற செய்திகள் வலம் வந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முயற்சி செய்த ரூட், எந்த அணியும் தன்னை வாங்க விருப்பம் தெரிவிக்காத காரணத்தினால் விளையாட முடியாமல் போனது.

தற்போது மீண்டும் அவ்வாறு செய்திகள் வந்தவுடனே அதை மறுத்து பேசியுள்ளார் ரூட். இங்கிலாந்து டெஸ்ட் அணியை மீண்டும் கட்டமைக்க தன்னுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்த இருப்பதாகவும் அதற்காக சில தியாகங்களை செய்தாக வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். டெஸ்ட் அணி மீது அவர் மிகவும் அக்கறை காட்டுவதாகவும் பேசியுள்ளார் ரூட்.

ஏற்கனவே இங்கிலாந்து அணியை சேர்ந்த மொயின் அலி மற்றும் பட்லர் ஆகியோரை அவர்களது அணிகள் ஏலத்திற்கு முன்பே தக்க வைத்து விட்டன. அதுவும் போக அந்த அணியின் பந்துவீச்சாளர் மார்க் வுட் ஏலத்தில் பங்கேற்க போவதாகவும் கூறியுள்ளார். இந்த முறை 8 அல்லாமல் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால் ஐபிஎல் தொடரில் அதிக புதுமுக வீரர்களை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -