தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 பிரிமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் மோதின.
டூ ப்ளஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
தென்னாபிரிக்கா டி20 லீக் தொடர்
ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதல் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி ரஷீத் கான் தலைமையிலான எம்ஐ அணி முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. இதில் ஆரம்பம் முதலே சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் தங்களது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி எம்ஐ அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னணி வீரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்து வெளியேற எம்ஐ அணி 12.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 73 ரன் எடுத்து தடுமாறியது. இந்த சூழ்நிலையில் ஜார்ஜ் லின்டே மற்றும் டிலானோ போச்சுடர் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை எம்ஐ அணிக்கு வெளிப்படுத்தினர்.
இந்தக் கூட்டணி 39 பந்துகளுக்கு 65 ரன்கள் குவித்தது. லிண்டே 48 ரன்கள் டிலானோ 22 பந்தில் 44 ரன்கள் என ஓரளவு நன்றாக விளையாடியதால் எம்ஐ அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கான்வே 9 ரன்னில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அணியின் கேப்டன் டு பிளசிஸ் சிறப்பாக விளையாடினார்.
ஜோபர்க் அணிக்கு முதல் வெற்றி
மற்றொரு 3வது வரிசை ஆட்டக்காரர் டுப்லாய் இவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்து சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது விக்கெட்டுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து நன்றாக விளையாடியது. இதில் அணியின் கேப்டன் டூ பிளசிஸ் 23 பந்துகளை எதிர் கொண்டு 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 30 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய பேர்ஸ்ட்டோ 14 ரன்னில் வெளியேற 11.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:2025 தொடங்கி 2 வாரம் கூட ஆகல.. அதுக்குள் ஓய்வை அறிவித்த 4 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்.. 2 இந்திய வீரர்களும் ஓய்வு
அதிக நேரமாகியும் மழை விடாத காரணத்தால் டக் வொர்த் லீவ்ஸ் விதிப்படி சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் 30 ரன் குவித்து சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த அணியின் கேப்டன் டூப்ளசிஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். தனது முதல் போட்டியில் விளையாடும் சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது முதலாவது வெற்றியாக அமைந்துள்ளது. தனது இரண்டாவது போட்டியில் விளையாடும் எம்ஐ அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.