2025 கிரிக்கெட் உலகில் ஒரு முக்கியமான ஆண்டாக அமைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தங்களுக்கு பிடித்த அணி, தங்களுக்கு பிடித்த வீரர்கள் என அனைவரும் இந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ரசிகர்களின் ஆசையாக இருக்கும்.
ஆனால் புத்தாண்டு பிறந்து பத்து நாட்கள் ஆகுவதற்குள்ளே பல சம்பவங்கள் நடந்து விட்டது. குறிப்பாக சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை இந்தியா இழந்துவிட்டது.
இதன் மூலம் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. சரி அதுதான் போகட்டும் என்றால் உலக கிரிக்கெட்டில் நான்கு வீரர்கள் 2025 ஆம் ஆண்டின் முதல் வாரத்திலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்கள்.
குப்தில், தமீம் இக்பால் ஓய்வு:
இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மார்ட்டின் குப்தில். உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் மற்றும் 2019 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமான தோனியின் ரன் அவுட்டை நிகழ்த்தியவர் என்ற பல பெருமைகளை குப்தில் படைத்து இருந்தார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் வங்கதேச அணியின் ஜாம்பவான் தமீம் இக்பால். வங்கதேச அணியை பொறுத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர், முன்னாள் கேப்டன் என பல பெருமைகளை தமீம் இக்பால் படைத்திருந்தார். இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற போவதாக தமீம் இக்பால் அறிவித்திருக்கிறார்.
வருண் , ரிஷி தவான் ஓய்வு :
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆல் ரவுண்டர் ரிஷி தவான். பேட்டிங், பந்துவீச்சு என பட்டையை கிளப்பிய ரிஷி தவான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆல் ரவுண்டராக விளங்கினார். ஆனால் ரிஷி தவானுக்கு இந்திய அணியில் பெரிய அளவு வாய்ப்பு கிடைத்ததே கிடையாது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று போட்டிகளும் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியிலும் இந்தியாவுக்காக அவர் விளையாடுகிறார்.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் வேகப்பந்து வீச்சாளர் வருண் அரோன். இந்திய அணியில் தற்போது பெரும்பான்மையான வீரர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் நிலையில் வருண் அரோன் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.
இந்திய அணிக்காக ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட் ,ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டு களையும் வருண் அரோன் வீழ்த்தி இருந்தார். எனினும் அதன் பிறகு அவர் ஒரு முறை கூட இந்திய அணிக்காக அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது கிடையாது.