அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா கூறியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்து துணை கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். தற்போது இது குறித்து அவர் முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நீக்கியது ஏன்?
தற்போது இந்திய டி20 அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே இரண்டாவது விக்கெட் கீப்பராக வரக்கூடிய வரும் துவக்க ஆட்டக்காரராக இருக்க வேண்டும். இதன் மூலம் இரண்டாவது விக்கெட் கீப்பர் மற்றும் மாற்று துவக்க ஆட்டக்காரர் என்கின்ற இரண்டு இடங்களுக்கு ஒரு வீரரை வைத்தால் போதுமானதாக இருக்கும். இதனால் கூடுதலாக ஒரு வீரரை அணியில் சேர்க்கும் வாய்ப்பு உருவாகும்.
இதன் காரணமாகவே துவக்க இடத்தில் விளையாட முடிந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷானை தேர்வு செய்தார்கள். எனவே ஜிதேஷ் சர்மா டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து எதிர்பாராத விதமாக நீக்கப்பட்டார். அவர் மோசமாக விளையாடாத பொழுதும் நீக்கப்பட்டது அதிர்ச்சியாகவே அமைந்திருந்தது.
இவர்தான் என்னை மீட்டார்
இதுகுறித்து ஜிதேஷ் சர்மா பேசும்பொழுது “டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக நான் மிகக் கடுமையாக உழைத்திருந்தேன். அதனால் அது நடக்காமல் போனபோது மனம் உடைந்தது. ஆனால் அது விதி. அந்த நேரத்தில் நான் உணர்வற்ற நிலையில் இருந்தேன். என்னை சுற்றி நடப்பது எதுவும் எனக்கு புரியவில்லை. என் குடும்பத்துடன் நேரம் செலவிட்டதும் தினேஷ் கார்த்திக் உடன் பேசியதும் இதிலிருந்து வெளிவர உதவியது”
இதையும் படிங்க : ஹர்ஷித் ராணாவ நிறைய திட்டி இருக்கேன்.. அது அவசியம்தான்.. ஆனா இப்ப இப்படி பண்ணிட்டாரு – ஸ்ரீகாந்த் பாராட்டு
“என்னை அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்று அறிவிக்கும் வரை எனக்கு தெரியாது. ஆனால் அதற்குப் பிறகு தேர்வாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய விளக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன். மேலும் அணியில் பயிற்சியாளர்களுடன் பேசியதில் எனக்கு தெளிவு கிடைத்தது. எனவே நான் அதை முழுதாகவே புரிந்து கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






