இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை முதல் டெஸ்ட் போட்டி துவங்க இருக்கும் நிலையில் இந்திய கேப்டன் பும்ரா சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
நாளை துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்று அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வழி நடத்த இருக்கிறார்.
வேகப்பந்துவீச்சாளர்தான் கேப்டன் ஆக வேண்டும்
இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பும்ரா பேசும் பொழுது “வேகப்பந்துவீச்சாளர்கள் கேப்டனாக இருக்க வேண்டும் என நான் எப்பொழுதும் வாதிட்டு வந்திருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் திட்டங்களை வகுப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு கம்மின்ஸ் வேகப் பந்து வீச்சு கேப்டனாக மிகச் சிறந்ததை செய்திருக்கிறார். இந்தியாவில் கபில்தேவ் இருந்திருக்கிறார். கிரிக்கெட் உலகில் இப்படியான மாடல்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். இது நம்பிக்கையுடன் புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்”
“டெஸ்ட் கிரிக்கெட்டில் நாட்டை கேப்டனாக பிரதிநிதித்துவப்படுத்துவது, இந்திய கிரிக்கெட்டில் ஒரு சிலரே செய்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய கௌரவம். இதைவிடபெரிய கவுரவம் எதுவும் கிடையாது. நான் சிறுவயதில் இருந்தே டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றுதான் மிகவும் விரும்பினேன்”
ரோகித்திடம் பேசி விட்டேன்
மேலும் பேசிய பும்ரா கூறும் பொழுது “நான் ரோகித் சர்மாவிடம் கேப்டனாக அணியை வழிநடத்துவது குறித்து பேசினேன். அதற்குப் பிறகு இங்கு முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பை செய்வதில் எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்தது. மேலும் ஷமி இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர். அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க : இந்தியா ஆஸி முதல் டெஸ்ட்.. பாதி போட்டியை மிரட்டும் மழை.. ஆடுகளம் மற்றும் மைதான வரலாற்று புள்ளி விபரங்கள்
“விராட் கோலியை ஒரு பேட்ஸ்மேனாக எதுவும் சொல்லத் தேவை கிடையாது. அவர் இந்த விளையாட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் எங்களுடைய அணியில் மிகச் சிறந்தவர். ஒன்று அல்லது இரண்டு தொடர்கள் மேலே கீழே இருக்கலாம். அவரிடம் இருக்கும் நம்பிக்கை நம்ப முடியாத அளவுக்கு சிறப்பானது” என்று கூறியிருக்கிறார்.






