இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய கேப்டனை தேடும் பணியில் பிசிசிஐ இறங்கி உள்ளது.
இந்த சூழ்நிலையில் தேடி வந்த டெஸ்ட் கேப்டன் பதவியை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த இந்திய டெஸ்ட் கேப்டன்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வந்ததால் பெரிய விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். இந்த சூழ்நிலையில் அவருக்கு பதிலாக புதிய கேப்டன் தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுக் கொண்டிருக்க இதில் விராட் கோலி டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியானது.
இந்த சூழ்நிலையில் அவரது முக்கியத்துவத்தை உணர்ந்து பிசிசிஐ முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறிவரும் நிலையில் மீண்டும் புதிய கேப்டனுக்கான ஆள் தேடும் பணியில் இறங்கி இருக்கிறது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தபோது துணை கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா கேப்டனுக்கான அடுத்த தேர்வில் இருந்தார். இந்த நிலையில் அவரை பிசிசிஐ அணுகியதாகவும் ஆனால் பும்ரா அந்தப் பதவியை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
பதவியை நிராகரித்த பும்ரா
அதற்கான காரணம் என்னவென்று பார்க்கும்போது, சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் காயம் அடைந்து வெளியேறிய பும்ரா அதற்குப் பிறகு பெரிய ஓய்வில் இருந்து மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இருப்பதால் ஐந்து போட்டிகளிலும் அவரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இதையும் படிங்க:ஆர்சிபிக்கு வந்த சோதனை.. ஸ்டார் வீரர் இந்தியா திரும்புவதில் சிக்கல்.. தொடரை விட்டு விலகலா.? வெளியான அப்டேட்
மேலும் அவரது பணிச்சுமை மற்றும் காயத்தை கருத்தில் கொண்டு, பும்ரா இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பதவியை அவர் நிராகரித்திருக்கும் நிலையில் கேப்டனுக்கு அடுத்த தேர்வில் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில் சுப்மான் கில் அடுத்த டெஸ்ட் கேப்டனுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் எனவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.