இன்று டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பந்துவீச்சில் முக்கிய பங்களிப்பு செய்த ஜேமி ஓவர்டன் தனது பந்து வீச்சு குறித்து பேசியிருக்கிறார்.
கடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கடைசியில் வீசிய ஒரு ஓவரில் மட்டும் டிம் டேவிட்டுக்கு எதிராக முப்பது ரன்கள் விட்டுக் கொடுத்தார். இது சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அசத்தலான ஸ்பெல்
இன்று டெல்லிக்கு எதிராக அற்புதமாக நான்கு ஓவர்கள் பந்து வீசி முக்கிய நான்கு விக்கெட்டுகளை மேல் வரிசையில் கைப்பற்றி வெறும் 18 ரன்கள் மட்டுமே ஜேமி ஓவர்டன் விட்டு தந்தார். இன்று அவருடைய பவுலிங் பங்களிப்பு இல்லையென்றால் சிஎஸ்கே தோல்வி அடைந்திருக்கும்.
இதுகுறித்து அவர் பேசும் போது “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்களுடைய சொந்த ரசிகர்களுக்கு முன்பாக சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடத்தில் வெற்றி பெறுவது சிறப்பாக உணர வைக்கிறது”
என் நோக்கம் இதுதான்
“எனக்கு சில போட்டிகளாக பந்துவீச்சு சரியாக போகவில்லை. கடந்த வாரம் டேவிட்டுக்கு எதிராக என் பந்துவீச்சில் கட்டுப்பாட்டை இழந்தேன். டி20 கிரிக்கெட்டில் இதுவெல்லாம் சாதாரணமாக நடக்கக் கூடியதுதான். ஆஸ்திரேலியா பிக்பேஸ் டி20 தொடரில் நல்ல வேகத்தில் நான் பந்துவீசினேன். அதே வேகத்தை தொடர வேண்டும் என்று முடிவு செய்தேன்”
இதையும் படிங்க 6 முறை சோகத்திற்கு புல் ஸ்டாப்.. சஞ்சு சாம்சன் ஓவர்டன் மேஜிக் ஆட்டம்.. சிஎஸ்கே அசத்தல் வெற்றிக்கு காரணம் என்ன?
“நான் என்ன முயற்சி செய்கிறேன் என்றால், முழு முயற்சியுடன் பந்து வீசி சில விக்கெட் கைப்பற்றினால் போதும் என்று நினைக்கிறேன். என்னுடைய நோக்கம் ஆப் ஸ்டெம்ப் மேலே அடிக்க வேண்டும் என்பதுதான். இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் ஒட்டி வந்தது. சில நேரங்களில் நன்றாக வந்தது. எனவே பேட்ஸ்மேன்களை முன்னாடி வந்து விளையாட வைக்க முடிவு செய்து பந்து வீசினேன். அது நன்றாக வேலை செய்தது” என்று கூறி இருக்கிறார்.






