நாளை இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக துவங்கும் முதல் டெஸ்ட் போட்டி உடன் 42 வயதான சாதனை வேகப்பந்துவீச்சாளர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுகிறார். அவர் சிலரின் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெறுவதாக குற்றச்சாட்டு இருந்தது. அது உண்மைதான் என அவரே வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கின்ற அரிய சாதனையை நிகழ்த்தியவராக ஜேம்ஸ் ஆண்டவர் இருக்கிறார். அடுத்து ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து விளையாடும் ஆசஸ் டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் திடீரென இரண்டு போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரில் முதல் போட்டியோடு ஓய்வு பெற்றுக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவரை வற்புறுத்தி ஓய்வு பெற வைத்திருக்கிறார்கள் என்று வெளியில் இருந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
இது குறித்து பேசி இருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறும் பொழுது “இங்கிலாந்து கிரிக்கெட்டில் மூன்று முக்கிய நபர்களான பென் ஸ்டோக்ஸ், பிரண்டன் மெக்கலம் மற்றும் ராப் கீ மூவரும் என்னை மான்செஸ்டரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியாக சந்திக்க வேண்டும் என்று அழைத்தார்கள். அப்போதே அது என்னுடைய ஓய்வு குறித்து விவாதிக்கத்தான் இருக்கும் என நினைத்தேன். இறுதியில் நான் நினைத்தது போலவே அதுதான் நடந்தது.
நான் இதற்காக கோபப்படுவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் நான் சாந்தமாக இருந்தது அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய ஓய்வு குறித்து அவர்கள் மிகவும் நாகரிகமாக தனியாக பேச அழைத்தது எனக்கு பிடித்திருந்தது. இதனால் நான் அவர்களுக்கு நன்றி சொன்னேன். பின்னர் ஒரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றுக் கொள்வதாக கூறி அந்த விவாதத்தை சுமுகமாக முடித்துக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 16.4 ஓவர்.. சிஎஸ்கே ஆர்சிபி வீரர்களுக்கு.. தரமான சம்பவம் செய்த திருச்சி பசங்க.. டிஎன்பிஎல் 2024
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு எந்த தாக்கத்தையும் உருவாக்கவில்லை. அந்தத் தொடரை வெல்ல முடியாமல் இங்கிலாந்து அணி ஏமாந்தது. மேலும் ஆஸ்திரேலியா சென்று விளையாடும் ஆசஸ் தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து இருக்கிறது. இதன் காரணமாகவே இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அழுத்தம் கொடுத்து ஓய்வு பெற வைத்திருக்கிறது.