இந்திய தேர்வுக் குழுவின் தலைவராக முன்பு இருந்த சேத்தன் சர்மா சில சம்பவங்களால் பதவியில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறினார். இதன் காரணமாக இந்திய அணி குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தேர்வுக்குழு தலைவர் இல்லாமல் செயல்பட்டது.
இதற்கு அடுத்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக பிரபல முன்னாள் அதிரடி இந்திய வீரர் ஷேவாக் வரையில் நிறைய பெயர்கள் அடிபட்டன. ஆனால் மும்பையில் இருந்து முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் கொண்டுவரப்பட்டார்.
இங்கிலாந்தில் வைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஜூன் மாதத்தில் தோற்ற இந்திய அணி அதற்கு அடுத்து மிகப்பெரிய இடைவெளி எடுத்து ஜூலை 16ஆம் தேதிதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது.
இந்தத் தொடருக்கு அஜித் அகர்க்கர் தலைமையிலான தேர்வுக்குழுவே அணியைத் தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் உள்ளே நுழைந்ததும் உடனடியாக ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டிஸ் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அடுத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக காயத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வந்து ஆசியக் கோப்பையில் தேர்வு செய்தது. அனுபவ வீரர்கள் என்கின்ற தகுதியின் அடிப்படையில் பெரிய தொடருக்கு இவர்களை அஜித் அகர்கர் கொண்டு வந்தது உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான பலன்களை கொடுத்தது.
உலகக் கோப்பைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தின் சாய் சுதர்சனுக்கு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கொடுக்க, அவரும் தன்னுடைய முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்து அசத்தினார்.
இதற்கு அடுத்து உள்நாட்டில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 14 மாதங்கள் கழித்து இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் கொண்டு வந்தார்கள். டி20 உலக கோப்பைக்கு முன்பாக அணியில் பலரது இடம் உறுதி செய்யப்பட்டு இருப்பது நல்லதாக பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி, சமி மற்றும் கேஎல்.ராகுல் இல்லாத போதும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்த புஜாரா, இந்திய மண்ணில் வேகப்பந்து வீச்சில் மிகச் சிறப்பான புள்ளி விபரத்தை வைத்திருக்கும் உமேஷ் யாதவ் என மூத்த வீரர்கள் யாரையுமே தேர்வு செய்யவில்லை.
இந்திய விராட் கோலி இல்லாமலும் அனுபவ வீரர்கள் தொடர்ந்து காயமடைந்த போதும் கூட ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல் என இளம் வீரர்களே இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாடாத இஷான் கிஷானை அதிரடியாக புறக்கணித்து துருவ் ஜுரலுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இன்று துருவ் ஜுரல் கிரிக்கெட்டின் எதிர்கால வீரராக ஒரே போட்டியில் உயர்ந்து விட்டார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டை புறக்கணித்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சம்பள பட்டியலில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மேலும் தேர்வுக்குழுவால் தேர்வில் பரிசீலனை செய்ய மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயர் இசான் கிஷானுக்கு அடுத்த சம்பவம்.. பிசிசிஐ காட்டும் தொடர் அதிரடி.. எதிர்காலம் என்னவாகும்?
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இன்னும் ஒரு வருடத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பாகவே, இந்திய கிரிக்கெட்டில் பல ஆரோக்கியமான முடிவுகளை எடுப்பதோடு, அதிரடியான முடிவுகளையும் எடுக்கிறது. இதன் காரணமாக புதிய இந்திய அணியை கட்டமைப்பதில் பெரிய முன்னேற்றத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!