தலையில் பலத்த அடிப் பட்டதால் பாதியிலேயே வெளியேறிய லீச் !அவருக்கு மாற்று வீரர் யார் ? அறிவித்தது இங்கிலாந்து அணி

0
122
Jack Leach head injury

நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணியளவில் துவங்கியது!

இதற்கு முன்பாக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி தொடர்ந்து உள்நாட்டிலும், வெளியிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆசஷ் தொடர், வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்விகளைச் சந்தித்து இருந்தது. உலக டெஸ்ட் சாம்பின்ஷிப்பின் இறுதிபோட்டிக்கான ஓட்டத்தில் ஏறக்குறைய இங்கிலாந்து அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம்.

- Advertisement -

இந்த நிலையில் உள்நாட்டு கவுன்டி அணிகள் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி தரமான டெஸ்ட் வீரர்களை உருவாக்க தவறிவிட்டதாக இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கருதி, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் சீரமைப்பிற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காமல், உள்ளூர் கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றனர். மேலும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்சும், டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லமும் நியமிக்கப்பட்டார்.

இன்று லார்ட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் டெவோன் கான்வோ எட்ஜ் எடுக்க, பந்து பவுண்டரியை நோக்கிச் சென்றது. இதை விழுந்து தடுத்துப் பிடித்த இங்கிலாந்தின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் லீச்சிற்கு தலையில் அடிபட்டு வாலி உண்டாக அவர் வெளியேறினார்.

தற்போது லீச்சிற்கு தலையில் அடிபட்டுள்ளதால் அவருக்கு மூளைஅதிர்வு ஏற்பட்டு உள்ளதாகவும். இதனால் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் வெளியேறுவதாகவும், தலையில் அடிபட்டால் சரியான மாற்று வீரர் அவருக்குப் பதிலாக விளையாடலாம் என்கிற விதி இருப்பதால், அவருக்கான மாற்று வீரரை விரைவில் தேர்ந்தெடுத்து அறிவிப்போம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது வரை 108 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து சுருளும் நிலைமையில் நியூசிலாந்து அணி இருக்கிறது!

- Advertisement -