“இந்தியாவில் இப்படி அமையாது; ரொம்ப வேதனையா இருக்கு!” – ஆஸ்திரேலியா கேப்டன் வருத்தம்!

0
7592
Cummins

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் வரை அவர்களுக்கு உலகக்கோப்பை விட மிக மிக முக்கியமானது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆசஷ் தொடர்தான். வரலாற்று ரீதியாக அந்த முக்கியத்துவம் அந்தத் தொடருக்கு இருக்கிறது!

ஆனால் இதுவெல்லாம் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை மட்டுமே. ஆஸ்திரேலிய வீரர்களே எங்களுக்கு ஆசஷ் டெஸ்ட் தொடரை விட, இந்தியாவை இந்தியாவில் வைத்து பார்டர் கவாஸ்கர் டிராபியில் வீழ்த்துவது lதான் மிக முக்கியமானது என்று சொல்லும் அளவுக்கு மாறிப்போனது!

- Advertisement -

காரணம், இந்தியாவை இந்தியாவில் வைத்து வெல்வது என்பது ஆஸ்திரேலியாவுக்கு 2 முறை மட்டும்தான் நடந்திருக்கிறது. அவர்கள் உலக கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய உச்சாணிக்கொம்பில் இருந்த பொழுதும் இந்திய மண்ணில் தோல்வியையே கண்டிருக்கிறார்கள். இத்தோடு சேர்த்து ஆஸ்திரேலியா சமீபத்தில் தொடர்ந்து இரண்டு முறை தங்களது சொந்த நாட்டில் இந்தியாவுக்கு எதிராக தோற்று மோசமான வரலாறுக்கும் சொந்தக்காரர்களாக மாறினார்கள். இதுவெல்லாம் சேர்த்து அவர்களது கிரிக்கெட் கௌரவத்திற்கு இழுக்கு உண்டாக, இந்தியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியாவை வீழ்த்துவது ஆசஷ் டெஸ்ட் தொடரை விட மிக முக்கியமானது என்று அவர்களை எண்ண வைத்துவிட்டது!

இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மிக மோசமான முடிவையே தந்தது. அவர்களின் பேட்டிங் தரம் பற்றி அவர்களையே சந்தேகப்படும்படி செய்தது. ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் திரும்பி வந்தார்கள். நேற்றைய நாள் முடிவு வரை ஆட்டம் அவர்களது கையிலே தான் இருந்தது. இன்று காலை ஆரம்பித்த முதல் ஆட்ட நேரத்திலேயே அவர்கள் ஒன்பது விக்கட்டுகளை வேகமாக பறி கொடுத்து, கையில் இருந்த வெற்றியை தவறவிட்டார்கள்.

இது குறித்து தோல்விக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ” முதல் இன்னிங்ஸில் நாங்கள் எடுத்த 263 ரன்கள் நல்ல ரன்கள் என்று நினைத்தேன். எங்களுடைய வீரர்கள் மிக நன்றாக திரும்பி வந்தனர். ஆனால் இந்தியாவும் நன்றாக பேட்டிங் செய்தது. இப்படியான ஒரு 250 ரன் என்பது வெறும் ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப் மூலமே வந்து விடக் கூடியது. இரண்டு அணிகளின் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆட்டம் சமநிலையில் இருந்தது. ஆனால் நாங்கள் ஆட்டத்தில் முன்னோக்கி இருந்து பின்பு பின்னோக்கி போய் விட்டோம். இது எப்படி நிகழ்ந்தது என்று எங்களுக்கு ஒரு மதிப்பாய்வு அவசியம். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும்தான் அவர்களது ஆட்டத்திற்கு பொறுப்பு. சில பந்துகளில் உங்களது பெயர் இருக்கும். ஆனாலும் கூட ஷாட் தேர்வு பற்றி எங்களுக்கு ஒரு ஆய்வு தேவை. இரண்டு ஆட்டங்களும் எங்களுக்கு ஏமாற்றத்தை தந்தன. ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு மிகவும் வேதனையானது. ஏனென்றால் இந்தியாவில் ஒரு ஆட்டத்தில் முன்னிலையில் இருப்பது அடிக்கடி நடக்காது. அப்படி இருந்தும் நாங்கள் கையில் இருந்த ஆட்டத்தை தவறவிட்டது மிகவும் ஏமாற்றம் ஆனது!” என்று வருத்தமாக கூறியிருக்கிறார்!

- Advertisement -